தேவகோட்டை, செப். 19:
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து, உண்ணாவிரதப்
போராட்டம் நடத்த, ஆசிரியர்களுடன் சேர்ந்து தேவகோட்டை அருகிலுள்ள
அனுமந்தக்குடி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். அனுமந்தக்குடி
அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த கணிதப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை,
பணிநிரவல் மூலம் உலகம்பட்டி அரசு பள்ளிக்கு மாற்றியுள்ளதாகத் தெரிகிறது.
இதை, அப்பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை நேரில்
சந்தித்து முறையிட்டுள்ளனர். மேலும், பள்ளித் தலைமையாசிரியரை
சந்தித்து மாற்று உத்தரவு வரவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
பள்ளியில் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தும், பணியிடம் வேறு
பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியரும் மகப்பேறு விடுப்பில்
விரைவில் செல்லவிருப்பதால், 10-ம் வகுப்பில் பயிலும் 109 மாணவ-மாணவிகளுக்கு
கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களே இல்லாத சூழல் உள்ளது. 6 முதல் 10 வகுப்புகளுக்கு கணிதப் பாடத்துக்குரிய ஆசிரியர் இல்லை. எனவே,
இதில் தலையிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தேவையான நடவடிக்கை
எடுக்க வேண்டும். இல்லையென்றால், வரும் 22-ம் தேதி பள்ளி முன்பாக
பொதுமக்களுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டமும், அதைத் தொடர்ந்து
மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களும்
நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
