அன்னூர்: "சமச்சீர் கல்வியில் ஏழாம் வகுப்பு கணக்கு தமிழ்வழி புத்தகங்களில், ஏராளமான பிழைகள் உள்ளன' என, பெற்றோர் புகார் எழுப்பியுள்ளனர்.
இது குறித்து பெற்றோர் கூறியதாவது: ஏழாம் வகுப்பு கணக்கு (கணிதம்) பாடத்தில் எடுத்துக்காட்டு பிழை, கருத்துப் பிழை, எழுத்துப் பிழை என ஏராளமாக உள்ளன.1) 2ம் அத்தியாயத்தில் 44ம் பக்கத்தில் மாறிகள், மாறிலிகள் குறித்த கணக்கு உள்ளது. இதில், "ஒரு கணக்கில் எண்கள் மாறாதவை. எனவே அவை மாறிலிகள் என்று அழைக்கப்படுகின்றன' என்று குறிப்பிட்டு, எடுத்துக்காட்டாக சில எண்களும் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை விளக்கும்போது, "இவை மாறிகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளன. முதல் வரியில், மாறிலிகள் என்று தெரிவித்து விட்டு, அடுத்த வரி எடுத்துக்காட்டில், அவை, மாறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குழம்புகின்றனர்.
2) 59ம் பக்கத்தில், ஒரு கேள்வியில் "ஏ'வின் இருமடங்கிலிருந்து "பி'யை கழிக்கவும்' என கேட்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் பகுதியில், பி-2ஏ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு. 2ஏ-பி என்பது தான் சரி.
3) 81ம் பக்கத்தில், எடுத்துக்காட்டு 3.0ல் ஒரு கேள்வியில், பயணித்த நேரம் (கி.மீ.,) என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு. பயணித்த தூரம் (கி.மீ.,) என்று இருக்க வேண்டும்.
4) 92ம் பக்கத்தில் எடுத்துக்காட்டு 3.1ல், ஒரு எண் அல்லது தசமானத்தை சதவீதமாக மாற்ற, 100 சதவீதத்தால் பெருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவறு. எண் அல்லது தசமானத்தை சதவீதமாக மாற்ற 100 ஆல் பெருக்க வேண்டும் என்றுதான் இருக்க வேண்டும்.
5). 76ம் பக்கத்தில் 3வது அத்தியாயத்தில் "பயனித்தால்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "பயணித்தால்' என்று இருக்க வேண்டும்.
6). 47ம் பக்கம், 2வது அத்தியாயத்தில், "ஒவ்வொற்றையும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு. "ஒவ்வொன்றையும்' என்று இருக்க வேண்டும்.
7). 32ம் பக்கத்தில் ஒரு எண்ணுக்கு முன், ரூ என்கிற எழுத்தும், ரூபாய்க்கான சின்னமும் இருக்கிறது. எண்ணுக்கு முன் இரண்டையும் எழுதுவது தவறு. அரசுப் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்ட சமச்சீர் கல்வி கணக்கு பாடப் புத்தகம் வழக்கத்தை விட பாடங்கள் அதிகமாகவும், சற்று கடினமாகவும் உள்ளது. இத்துடன் இவ்வளவு பிழைகளும் சேர்ந்துவிட்டது. இந்த பிழைகளை திருத்தி, துணைப் பாடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பெற்றோர் தெரிவித்தனர்.
தமிழ்வழி கணக்கு புத்தகத்தில் காணப்படும் பிழைகள், ஆங்கில வழி கணக்கு புத்தகத்தில் இல்லை என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக