சிவகங்கை: சிவகங்கையில் அமைச்சர் பரிந்துரைத்த ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்க, கவுன்சிலிங்கில் பெரும்பாலான இடங்களை மறைத்து விட்டதாக, ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 710 உயர்நிலைபள்ளிகளில் ஏற்படும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய, இரண்டு நாள் கவுன்சிலிங் நேற்றுடன் முடிந்தது.
நேற்று முன்தினம் சிவகங்கையில் கவுன்சிலிங் விதிப்படி நடக்கவில்லை என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது.இதையடுத்து, முதல் நாள் கவுன்சிலிங் ரத்தானது. சிவகங்கையில் மட்டும் நேற்று முதல் கவுன்சிலிங் துவங்கியது. இதில், 27 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாற்றத்திற்கான கவுன்சிலிங்கில், 7 பேர் நடுநிலைப்பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக இருக்க விருப்பம் தெரிவித்ததால், அதற்கான கவுன்சிலிங் காலையில் நடந்தது. மற்றவர்கள், உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக செல்ல விருப்பம் தெரிவித்ததால், இவர்களுக்கு மாலையில் கவுன்சிலிங் நடந்தது. இதில், அமைச்சர் கோகுல இந்திரா பரிந்துரைத்த (அமைச்சர், எம்-லிஸ்ட்) ஆசிரியர்களுக்கு, அப்பள்ளிகளை வழங்குவதற்காக, பெரும்பாலான இடங்களை மறைத்து கவுன்சிலிங் நடத்தியதாக, தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி புகார் தெரிவித்தது.
இதை கண்டித்து கவுன்சிலிங் மையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் ஜோசப் ரோஸ் கூறியதாவது: சிங்கம்புணரியில் எருமைப்பட்டி, திருப்புத்தூரில் தேவரம்பூர், கண்ணங்குடியில் சித்தானூர், காளையார்கோவில் சிறுவூர் பள்ளிகளுக்கு அமைச்சர் பரிந்துரை செய்த ஆசிரியர்களை நியமிக்க, கவுன்சிலிங்கில், அப்பள்ளிகளை காட்டாமல் மறைத்துள்ளனர்.
ஒளிவு மறைவற்ற பணியிட மாற்றம் வழங்குவதற்காக தான், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஆனால், அமைச்சர் பரிந்துரைத்த இடங்களை மறைத்து விட்டனர். இதனால், சீனியாரிட்டி ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர், என்றனர். முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத் கூறியதாவது:தொடக்க கல்வி இயக்குனரகம் ஒதுக்கிய இடங்களுக்கு தான், முறைப்படி கவுன்சிலிங் நடத்துகிறேன்.இதில், நானாக எந்த இடத்தையும் மறைக்கவில்லை, என்றார்.
SOURCE: DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக