நாமக்கல்: ஆறு முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி
வழங்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை, ஒரு சில
தலைமையாசிரியர்கள் செயல்படுத்த மறுப்பதால், கல்வியாளர்கள் கடும் அதிருப்தி
அடைந்துள்ளனர். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009, கடந்த 2010ம்
ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி, மத்திய அரசு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியது.
இச்சட்டத்தின்படி, ஆறு முதல் 14 வயது வரை குழந்தைகள் அனைவருக்கும் கல்வி
உரிமையாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம், குழந்தைகளுக்கான உரிமைகள், பள்ளியின்
பொறுப்பு, ஆசிரியரின் கடமைகள், பள்ளி மேலாண் குழுவின் பணிகள் என பல முக்கிய
அம்சங்களுடன் ஏழு அத்தியாயங்களில், 38 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டள்ளது.
அதன்படி, ஆறு முதல் 14 வயது வரை ஒவ்வொரு குழந்தையும், அருகாமைப் பள்ளியில்
தொடக்கக் கல்வி முடியும் வரை இலவசமாக, கட்டாயமாக கல்வி பெறுவதற்கு உரிமை
உண்டு.ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பள்ளியில் சேரவில்லை அல்லது
சேர்ந்து நின்று விட்டனர் என்றால், வயதுக்கு ஏற்ற வகுப்பில் அக்குழுந்தை
சேர உரிமை உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், இலவச கட்டாயத் தொடக்கக் கல்வியை
வழங்குவது மாநில அரசின் கடமை.ஒவ்வொரு பள்ளியும், ஆறு முதல் 14 வயது வரை
உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும். குறிப்பிட்ட
பள்ளிகள், முதல் வகுப்பில் குறைந்தது, 25 சதவீதம் அருகாமைப் பகுதியில் உள்ள
நலிந்த பிரிவுகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளை
சேர்ந்து தொடக்கக் கல்வி முடிக்கும் வரையில் இலவசக் கல்வியை வழங்க
வேண்டும். எந்தப்பள்ளியும், ஒரு குழந்தையை சேர்க்கும் போது, எந்தவொரு
கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. எந்தவொரு தேர்வுக்கும் உட்படுத்தக்
கூடாது. வயது சான்றிதழ் இல்லை என்பதற்காக பள்ளிச் சேர்க்கையை
மறுக்கக்கூடாது. பள்ளிச் சேர்க்கை காலம் முடிந்த பின்பும், குழந்தையை
பள்ளியில் சேர்க்க வேண்டும். அதன்படி, நாமக்கல் மாவட்டம் அனைவருக்கும்
கல்வி இயக்கம் சார்பில், 2012-13ம் கல்வி ஆண்டில், 0-14 வயது வரை உள்ள
பள்ளிச் செல்லா குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், 6-14 வயது வரை பள்ளிச்
செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, 15 யூனியனில் மேற்கொள்ளப்பட்டது.
அதில், பள்ளிச் செல்லா குழந்தைகள் திட்டக்கூறு, கஸ்தூரிபா காந்தி பாலிகா
வித்யாலயா, உண்டு உறைவிட மையங்கள் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர்
திட்டம் உள்ளிட்ட அனைத்து கூறுகளிலும் சேர்த்து மொத்தம், 1,987 பேர்
கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒருசில ஊராட்சி
துவக்கப்பள்ளியில், குழந்தைகளை சேர்க்க, தலைமையாசிரியர்கள் மறுப்பு
தெரிவிப்பதாக, "பகீர்' குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எவ்வித சான்றும் இல்லை
எனக்கூறி தட்டிக்கழிப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.அரசின் சட்டத்தை
முழுவதையும் அறிந்து கொள்ளாமல், அவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது,
கல்வியாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத அத்தகைய ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுத்தால் மட்டுமே, அரசின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும்
என்பது நிதர்சனமான உண்மை.