ஆகஸ்ட்-15 இந்தியத் திருநாடு அந்நியர் பிடியிலிருந்த விடுதலை பெற்ற நாள்.
நம் தாய்திருநாட்டின் விடுதலை போராடாமல் கிடைக்கவில்லை. பல விடுதலைப்
போராட்ட வீரர்களின் வீரத்தாலும் தியாகத்தாலும் விளைந்தது.பல விடுதலைப்
போராட்ட வீரர்களின் உயிரை விலையாகக் கொடுத்து விலைமதிப்பில்லா விடுதலை
கிடைத்தது. தாய்த்திருநாடு விடுதலை அடைவதே லட்சியமெனக் கொண்டு நம்
தலைவர்கள் போராடிக் கொண்டிருந்த போது ஆங்கில அரசு அதனை அடக்க பல
அடக்குமுறைகளை ஏவியது. சூழ்ச்சிகள் பல செய்தது. சுய நலத்திற்க்காக சிலர்
ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்ததுடன் விடுதலைப் போராட்டத்திலிருந்து
ஒதுங்கியிருந்து நம் வீரமறவர்களைக் காட்டிக்கொடுத்ததாகவும் வரலாறு
கூறுகின்றது. எண்ணிலடங்கா விடுதலை வீரர்களின் எண்ணமெல்லாம் தேச விடுதலை
ஒன்றையே லட்சியமாய்க் கொண்டிருந்தது. பல அடக்குமுறைகளையும் சூழ்ச்சிகளையும்
துரோகத்தையும் வேரறுத்து விளைந்தது நம் தேச விடுதலை. பல தியாக தீபங்களின்
செந்நீர் பட்டு பாறாங்கல் தடைகளையும் பிளந்தெறிந்து முளைத்தெழுந்தது நம் தேசத்தின் விடுதலை விதை.
இப்படியெல்லாம் போராடிய வீர மறவர்களின் வழித்தோன்றல்கள் தான் நாம்.
நமக்குள்ளேயும் நம் முன்னோர்களின் வீரமும் நெஞ்சுரமும் தியாகமும்
போர்க்குணமும் விதைக்கப்பட்டுள்ளது. நமக்குள்ளே ஆயிரம் பகத்சிங்கின்
வீரமும் சுபாஸ் சந்திரபோஸின் வீரமும் விதைக்கப்பட்டு வெளிவரத் துடித்துக்
கொண்டிருக்கின்றது. அந்த வீரத்தினை போர்க்குணத்தினை வெளிப்படுத்த வேண்டிய
நாள் தான் ஆகஸ்ட் 30 நம் உரிமை மீட்டெடுக்கும் மறியல் போராட்ட நாள்.
இழந்தையெல்லாம் பட்டியலிட்டு புலம்பிக்கொண்டிருக்க நாமென்ன கோழைகளா?
உரிமை மீட்டெடுக்க மறியலென்னும் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கும் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள்!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; -தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
அந்த அக்கினிக் குஞ்சினை போராட்ட களத்திலே வைக்கும் நாள் தான்
ஆகஸ்ட்-15. நாம் மூட்டும் போராட்ட நெருப்பின் சூடு தாங்காமல் போராடாமல்
பதவி சுகங்கண்டு வாழும் கொழுத்துப் பருத்த ஜீவனெல்லாம் வீதிக்கு வந்து
போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாகப் போகின்றது.
தனியாகப்
போராடினாலும் கூட்டாகப் போராடினாலும் தனி முத்திரை பதிப்பவர்கள் நாம்.
டிசம்பர்-2010 லே பலரும் போராட்டத்தை போதும் என்று முடித்துக் கொண்ட
போதிலும் இன்று வரை போராட்ட களத்திலே நெஞ்சுயர்த்தி கோரிக்கை நிறைவேறாது
ஓயாது எம் போராட்டம் என நிற்பவர்கள் நாம் மட்டும் தான். நடை தளர்ந்தவனுக்கு
நடக்க துணை தேவை நமக்கெதற்கு! போராடவே யோசிப்பவனின் துணை நமக்கெதற்கு?
சிறை நிரப்புவோம்! நம் உரிமை வேண்டி!
அரசின் கவனம் ஈர்ப்போம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டி!
பலர் சூழ்ச்சி செய்து சுய நலத்தோடு ஆங்கில அரசுக்கு விசுவாசமாக விடுதலைப்
போரில் ஒதுங்கியிருந்ததால் நம் தேசத்திற்கு விடுதலை கிடைக்காமல்
போகவில்லை.
வீர மறவர்களின் வீரத்தாலும் தியாகத்தாலும் விளைந்தது
விடுதலை. ஆகவே யார் ஒதுங்கினாலும் நம் வீரப் போராட்டம் நமக்கு நிச்சயம்
வெற்றியைக் கொடுக்கும்!
வாழ்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி! வெல்க நம் மறியல் போராட்டம்!
ம.ஜெகதீஸ் மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- கரூர் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக