சிவகங்கை: சிவகங்கையில், பள்ளிச்
சுற்றுச்சுவர் கல்லை உடைத்ததாக, 11 மாணவர்களை, பள்ளிக்குள் அனுமதிக்க
மறுத்த நிர்வாகத்திடம் விசாரணை நடத்த கலெக்டர் ராஜாராமன் உத்தரவிட்டார்.
சிவகங்கையில் உள்ளது, புனித சூசையப்பர்
மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளி திடலில், 25ம் தேதி, 11ம் வகுப்பை சேர்ந்த
மாணவர்கள் 11 பேர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு
வந்த பள்ளி முதல்வர், மார்க்கிரேட் சில்வியா பள்ளி காம்பவுண்ட்
சுற்றுச்சுவர் கல்லை ஏன் உடைத்தீர்கள் என மாணவர்களிடம் கேட்டுள்ளார்.
அதற்கு மாணவர்கள் தாங்கள் உடைக்கவில்லை என பதிலளித்தனர்.
இதை ஏற்காத முதல்வர், "நீங்கள் தான்
உடைத்தீர்கள்; அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்" என கூறியுள்ளார். இதற்கு
மறுத்த மாணவர்களை, அதன்பின் பள்ளிக்கு வர அனுமதிக்கவில்லை. மாணவர்களின்
பெற்றோர் சென்று, மன்னிப்பு கேட்டும் பலனில்லை. இதையடுத்து, பெற்றோருடன்,
நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த மாணவர்கள் கலெக்டர் ராஜாராமனிடம் புகார்
தெரிவித்தனர்.
சி.இ.ஓ., செந்திவேலனிடம் பேசிய கலெக்டர்,
நேரடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி, மாணவர்களின் கல்வி பாதிக்காத
வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக