கோவை: கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார்,
மெட்ரிக் பள்ளிகளில் " அன்னையர் குழு" செயல்படுவது இல்லை என்று பெற்றோர்கள்
புகார் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளின் தரத்தை உடனுக்குடன் ஆய்வு செய்து,
அதில் உள்ள குறைகளை களையும் நோக்கில் "அன்னையர் குழு" பள்ளிக்
கல்வித்துறையின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் அமைக்கப்பட்டது.
இக்குழுவில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஐந்து பேர் இடம்
பெற்றிருக்கவேண்டும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று இக்குழு கூடி,
பள்ளியின் அடிப்படை வசதிகள் பராமரிப்பு, குடிநீர், சுகாதார வசதிகளை
ஆராய்ந்து கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்தல் அவசியம். அவ்வாறு, பதிவு
செய்யப்படும் குறைகளை உடனடியாக சரிசெய்ய பள்ளி நிர்வாகம் நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இக்குழுவில் தொடர்ந்து ஒரே நபர்கள்
இடம் பெறாமல் ஒவ்வொரு வாரமும் பெற்றோர் உறுப்பினர்களை மாற்ற வேண்டும். கோவை
மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட தனியார், மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு
வருகிறது.
இதில், சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளில் கூட
இக்குழு சார்ந்த பணிகளை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. பெரும்பாலான
தனியார், மெட்ரிக் பள்ளிகளில் "அன்னையர் குழு" அமைக்கப்படவில்லை.
ஒருங்கிணைந்த மாணவர் நல பெற்றோர்கள் சங்க
மாவட்ட தலைவர் மணிமோகன் கூறுகையில், "அன்னையர் குழு என்ற ஒன்று எந்த
பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுவது கிடையாது. அன்னையர் குழு மட்டுமின்றி,
கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாணவர்கள் சேர்க்கை கண்காணிப்பு, கட்டண
விவகாரத்தில் செலவினங்கள் கண்காணிப்பு போன்ற எதற்கும் ஆட்கள் இல்லை"
என்றார்.
மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மனோகரன்
கூறுகையில், "அனைத்து பள்ளிகளிலும் அன்னையர் குழு ஏற்படுத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுசார்ந்த ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொண்டு,
பதிவேடுகள் கண்காணிக்கப்படுகின்றன. இதுபோன்ற பள்ளிகளின் புகார்களை
பெற்றோர்கள் தாராளமாக தெரிவிக்கலாம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"
என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக