கோவை: எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு,
முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
தமிழகத்தில்,
முப்பருவ முறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கடந்த ஆண்டு
செயல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு
மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமச்சீர் பாடத்திட்டத்தை,
மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக அக, புற
மதிப்பீட்டின் படி தேர்ச்சி கணக்கிடப்படுகிறது.
அக மதிப்பீட்டின் படி மாணவர்களின்
தனித்திறனுக்கு 40 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கு 60 மதிப்பெண்களும்
வழங்கப்படுகிறது. மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் "கிரேடு"
மதிப்பிடப்படுகிறது. அரசாணையின் படி, 2013- 14 கல்வியாண்டில், ஒன்பதாம்
வகுப்பு மாணவர்களுக்கும், 2014- 15ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி.,
மாணவர்களுக்கும் முப்பருவ முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுகுறித்த இறுதியான தகவல்களை பள்ளிக்கல்வித்துறை இதுவரை
வெளியிடவில்லை.
இதுகுறித்து, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்
அரசு ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், முப்பருவ
முறை அமல்படுத்தப்பட்டாலும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு பொதுத்தேர்வு
தற்போதைய முறையிலேயே, நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில்
அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் வீரமணி கூறுகையில்,
"எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவமுறை அமல்படுத்துவது குறித்து
தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில்
அமல்படுத்தப்படுமா என்ற இறுதி முடிவு மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக