கோவை: அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் 
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க "வெற்றி உங்கள் கையில்" என்ற 
புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு
 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் 
தேர்வை எளிதாகவும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள நிபுணத்துவம் பெற்ற 
மூத்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சியும் வழிகாட்டுதலும் இத்திட்டத்தின் 
வாயிலாக வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக சென்னையில் ஓர் அரசு பள்ளியிலும், 
கோவை ராஜவீதியில் உள்ள அரசு துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் 
இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 
முந்தைய ஆண்டுகளின் தேர்வு 
வினாத்தாள்களை கொண்டு மாதிரி தேர்வு நடத்துதல், வினா-வங்கியை பயன்படுத்தி 
பயிற்சி அளித்தல், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்துதல், எளிதான 
பாடப்பகுதிகளை அடையாளம் கண்டு கையேடுகளின் உதவியுடன் பயிற்சி அளித்தல், 
மாணவர்களின் பெற்றோரை அழைத்து ஆலோசனை வழங்குதல் இத்திட்டத்தில் இடம்பெறும்.
 பள்ளிகளில் இத்திட்டம் துவக்கப்பட்ட பின், பயிற்சியை ஆய்வு செய்து அறிக்கை
 அனுப்புமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து 
அரசு பள்ளிகளிலும் உடனடியாக "வெற்றி உங்கள் கையில்" திட்டத்தை துவக்கி 
மாணவர்களுக்கு பயிற்சியளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் 
அனைத்து அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் திட்டத்தை 
உடனடியாக செயல்படுத்துமாறு தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் 
ஞானகவுரி அறிவுறுத்தியுள்ளார். 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக