கல்வியை வணிகமயமாக்குவதிலிருந்து காத்தல், மழலையர் கல்வி முதல் முதுநிலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி, பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அரசியல்வாதிகள் தங்களின் செயல்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோரிக்கைகள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களுடையது.
All India Forum for Right to Education (AIFRTE) என்ற பெயரிலான அமைப்பினர், சமீபத்தில் தங்களின் நோக்கங்களை வெளியிட்டனர். அதில், கல்வி சீர்திருத்தம் பற்றி கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு,
எந்தவொரு அரசியல் கட்சியும் கல்வி சீர்திருத்தம் குறித்து தங்களின் தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடுவதில்லை. எனவே, எங்களின் கோரிக்கைகளை அவை தங்களின் செயல்திட்டத்தில் இணைத்துக்கொண்டு, அவற்றை குறிப்பிட்ட காலஅளவிற்குள் நிறைவேற்ற வேண்டும்.
கல்வி வணிகமயமாதலை கட்டாயம் தடுக்க வேண்டும். மாநில கல்வி நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை நிறுத்துவதோடு, சுயநிதி பாடத்திட்டங்கள், அவுட்சோர்சிங், கல்வியில் வெளிநாட்டு நேரடி முதலீடு, கல்வியில் லாப நோக்கம் உள்ளிட்டவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
கல்வி உரிமை சட்டத்தின்படி, 25% ஒதுக்கீட்டில் சேரும் நலிந்த குழந்தைகளுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே செலுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மக்களின் நிதி, பொது கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அது எந்த வகையிலும் தனியார் நிறுவனங்களுக்கு திருப்பி விடப்படுதல் கூடாது.
இலவசக் கல்வி என்பது LKG முதல் முதுநிலைப் பட்டப் படிப்பு(PG) வரை இலவசமாக வழங்கப்பட வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% அளவை கல்விக்கு ஒதுக்க வேண்டும். பொது செலவினத்தில் ஏற்படும் இடைவெளியை தவிர்க்கும் வகையில் கூடுதல் வளங்களை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக