சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர், ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், கம்ப்யூட்டர், உடற்கல்வி பயிற்றுவிக்க, 16,548 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், மாதம் 5,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. வாரத்தில் மூன்று நாள், பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டு முடிந்த நிலையில், சம்பளம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி, பகுதி நேர ஆசிரியர்கள், சங்கம் அமைத்து, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களை, அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள அ.தி.மு.க.,வினர் கணக்கெடுத்து உள்ளனர். ஓட்டு சேகரிக்க, அவர்களின் வீடுகளுக்கு செல்லும் அ.தி.மு.க.,வினர், "லோக்சபா தேர்தலுக்கு பின், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படும்; அதன்பின், பணி நிரந்தரம் செய்யப்படும்" எனக் கூறி வருகின்றனர்.
இதற்காக வரும் லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சி வேட்பாளரை பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளோர், அவர்களை சார்ந்தோர் ஆதரிக்க வேண்டும் என கோரி வருகின்றனர். மேலும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பயிற்சி முடித்து, அரசு பணிக்காக காத்திருக்கும், 55 ஆயிரம் பேருக்கும், அரசு வேலை வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க.,வினர் உறுதி அளித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக