பள்ளிக் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விளையாட்டுகள், பல்கலைகழகங்களில் இல்லாததால் மாணவர்கள், போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை.
கடந்த 2004ல், பள்ளிக்கல்வித் துறை மூலம் புதிய விளையாட்டுகளாக கராத்தே, சிலம்பம், வாள்சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை, டேக்வாண்டே போட்டிகள் கொண்டு வரப்பட்டன. மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதேபோல, தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில், தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள், விளையாட்டுக் கோட்டாவிற்கான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
பிளஸ் 2 வரை, தேசியப் போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் மூலம், கல்லுாரிகளில் விளையாட்டு கோட்டாவில் இலவச சேர்க்கையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு 500 பேர், விளையாட்டு கோட்டாவில் சேர முடியும். தடகளம், கால்பந்து, ஹேண்ட்பால், வாலிபால் வீரர்களுக்கு, எளிதில் கல்லுாரிச் சேர்க்கை கிடைக்கிறது. ஆனால், புதிய விளையாட்டில் தங்கப்பதக்கங்களை பெற்றிருந்தாலும், சில கல்லுாரிகளில் சேர்க்கை மறுக்கப்படுகிறது.
அண்ணா பல்கலை தவிர, தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைகழகங்களில், புதிய விளையாட்டுகள் இடம்பெறவில்லை. போட்டிகள் நடத்தப்படாததால், கல்லுாரிகளும், மாணவர்கள் சேர்க்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒருவேளை கல்லுாரியில் இடம் கிடைத்தால் கூட, வேறு விளையாட்டுக்கு மாற வேண்டியுள்ளது. ஆனால் தேசிய அளவில் பல்கலைகளுக்கு இடையிலான போட்டிகளில் சிலம்பம், கராத்தே, வாள்சண்டை, ஜூடோ, டேக்வாண்டோவுக்கு அனுமதி உள்ளது.
ஆறு முதல் பிளஸ் 2 வரை, ஒரே போட்டிகளில் கவனம் செலுத்தி, பதக்கங்களை குவித்த பின், கல்லுாரியில் வேறு போட்டிக்கு மாறுவது, மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பையும் தடுமாறச் செய்கிறது. கல்லுாரியிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே, விளையாட்டு கோட்டா மூலம் வேலைவாய்ப்பு எளிதாகும்.எனவே, கல்லுாரிகளில் புதிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டால், இந்த விளையாட்டுகளில், மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக