12-ம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும், பி.இ. உள்ளிட்ட படிப்புகளுக்காக வங்கிகளிடம் கல்விக் கடன் பெற உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏ.ரவி என்பவரது மகன் 12-ம் வகுப்பில் 59 சதவீத மதிப்பெண்கள் பெற்று, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்ந்தார். தனது மகனுக்கு பி.இ. பயில்வதற்காக ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் கல்விக் கடனாக வழங்கும்படி திருப்பூர் பெரமணல்லூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரவி விண்ணப்பம் அளித்தார்.
எனினும் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், மனுதாரரின் மகன் 59 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ள தால் கல்விக் கடன் வழங்க முடியாது எனவும் ஐ.ஓ.பி. நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரவி மனு தாக்கல் செய்தார். மனுதாரரின் மகனுக்கு கல்விக் கடன் வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து வங்கி நிர்வாகம் மேல் முறை யீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகி யோர் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறை யீட்டு மனுவை தள்ளுபடி செய்து அண்மையில் தீர்ப்பளித்துள்ளனர்.
நீதிபதிகளின் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பயில வசதியாக தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தக் கடன் இலவசமாக வழங்கப்படவில்லை. வட்டியுடன் சேர்த்து பிறகு மாணவர்கள் திருப்பி செலுத்தப்போகிறார்கள். பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசின் இந்தக் கொள்கையை மனதில் கொண்டு கல்விக் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது வங்கி கள் முடிவெடுக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்வி நிறுவனங் களில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் பெற உரிமை உண்டு என்று கடந்த 27.9.2012 அன்று நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 முதல் 30 நாள்களுக்குள் கல்விக் கடன் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 12-ம் வகுப்பு முடித்தவர்கள் நுழைவுத் தேர்வு மூலமாகவோ அல்லது 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலோ இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேரும்போது, அவர்களுக்கு கல்விக் கடன் வழங்கலாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் தகுதி நிர்ணயம் செய்துள்ளது.
இந்நிலையில் 12-ம் வகுப்பில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் கள் பெற்றவர்களுக்கு மட்டுமே கல்விக் கடன் வழங்க முடியும் என வங்கிகள் கூற முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக