அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டாலும், அது செயல்பாட்டிற்கே வராதது தான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களும் கல்வி வசதி பெறும் வகையில் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால், அரசு சீருடை முதல் புத்தகப்பை வரை அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகிறது. மாணவர்கள் கல்வித்தரம் மேம்படுத்தும் வகையில், கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதுடன், கல்வி கற்பிக்கும் முறையில் பல்வேறு புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. ஆங்கில வழிக்கல்வி போன்ற திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.
அதில் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் வகையில் கலவை சாதம் திட்டம் மற்றும் அட்சய பாத்திரம் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியது. அதில் கலவை சாதம் திட்டத்தின் படி ஒன்று மற்றும் மூன்றாவது வாரங்களில் திங்கள் கிழமையில் வெஜிடபிள் பிரியாணி, மிளகு முட்டையும்; செவ்வாய்க்கிழமையில் கொண்டைக்கடலை புலவு, தக்காளி முட்டை மசாலா, புதன் கிழமை தக்காளி சாதம், மிளகு முட்டை, வியாழக் கிழமையில், சாதம், சாம்பார், வேகவைத்த மூட்டை, வெள்ளிக்கிழமையில், கருவேப்பிலை அல்லது கீரை சாதம், மசாலா முட்டை, வறுத்த உருளைக்கிழங்கும் வழங்க வேண்டும்.
இரண்டு மற்றும் நான்கவாது வாரங்களில் திங்கள் கிழமை சாம்பார் சாதம், தக்காளி முட்டை மசாலா, செவ்வாய் கிழமைகளில் காய்கறி சாதம், மிளகு முட்டை; புதன் கிழமையில், புளி சாதம், தக்காளி மசாலா முட்டை, வியாழன் எலுமிச்சை சாதம், சுண்டல், தக்காளி முட்டையும்; வெள்ளிக்கிழமையில் சாதம், சாப்பாடு, வேக வைத்த முட்டை, வறுத்த உருளை போன்றவை வழங்க வேண்டும் என திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது; மாதிரி பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டன.
மாணவர்களின் கல்வித்தரத்தோடு உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நல்ல பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை அரசு அறிவித்து சில ஆண்டிற்கு மேலாகியும் இதுவரை இதனை பள்ளிகளில் அமல்படுத்த எவ்வித நடவடிக்கையுமில்லை. பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அட்டைகள் மட்டும் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. மாணவர்கள் பசியினை போக்கவும்; ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் ஏன் செயல்பாட்டிற்கு வராதது கேள்விக்குறியாக உள்ளது.
அட்சய பாத்திரம்
பள்ளிகளில் அட்சய பாத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தினமும் ஒரு காய் கொண்டு வந்து அந்த பாத்திரத்தில் போட வேண்டும். மாணவர்கள் பங்களிப்புடன் கொண்டு வரப்பட்ட திட்டம் போதிய ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், இதுவும் காணாமல் போயுள்ளது.
எரிவாயு எங்கே?
பள்ளி மாணவர்களுக்கு சமைப்பதற்காக காஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பள்ளிகளில் தனியாக மேடைகளும் அமைக்கப்பட்டன. அறிவிப்போடு நின்று போன திட்டங்களில் இதுவும் சேர்ந்துள்ளது. இதுவரை பள்ளிகளுக்கு காஸ் அடுப்பு வழங்கப்படவில்லை. இதனால் புகை அதிகளவு வெளி வரும் விறகு அடுப்புகளிலேயே சமையல் பணிகள் தொடர்கிறது.
சமையல் பணிகளுக்கு உதவியாக மிக்சி, கிரைண்டர் போன்றவை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் மின்சார வசதி ஏற்படுத்தப்படாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று அரசு அறிவித்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் அறிவிப்போடு நின்று போய் விட்டது. அறிவிப்போடு நிறுத்தாமல், அரசு அத்திட்டங்களை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக