கோவை: பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களில், எக்காரணம் கொண்டும் வகுப்பறை நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, தலைமையாசிரியர்களுக்கு மறு சுற்றறிக்கை அனுப்ப, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், சுற்றுச்சுவர் விரிசல், பழுதடைந்த பள்ளிக்கட்டட கூரை என, சேதமடைந்த நிலையில் மறு சீரமைப்பு செய்வதற்காக, பல பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைப்பு செய்ய, பொதுப் பணித்துறைக்கு, பட்டியல் அளித்து, ஆறு மாதங்களாகியும் எவ்வித முதற்கட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, மழைக்காலம் துவங்கிவிட்டதால், பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது.
இதை அறிவுறுத்தி, பள்ளிக்கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இருப்பினும், சில பள்ளிகளில், போதிய வகுப்பறை இன்மை உள்ளிட்ட காரணங்களால், பழைய கட்டடங்களிலேயே வகுப்பறை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், "பழுதடைந்த பள்ளி கட்டடங்களில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, வகுப்பறை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது, மழைக்காலம் துவங்கிவிட்டதால், மீண்டும் எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பப்படும். தவிர, வகுப்பறை பற்றாக்குறை இருப்பின், உரிய பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக