4/08/2017
4/02/2017
பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம். ஊதியமில்லாததால் பணியாளர்கள் அதிர்ச்சி. உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை.
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் துப்புரவு பணிக்கு ஆட்கள் நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் துப்புரவு பணிக்கு அரசு நிதி ஒதுக்கி கடந்த ஜனவரி 2016 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் ஊரக வளர்ச்சி துறையின் மூலம், பள்ளி மேலண்மை குழுவின் (School Management Committee) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதன் பின் தலைமையாசிரியர்கள் அந்த ஊதியத்தை வங்கியிலிருந்து எடுத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (Panchayat level Federation) மூலம் சம்பந்;தப்பட்ட ஊழியர்களின் வங்கி கணக்கின் மூலம் ஊதியம் வழங்கப்படும். இந்நிலையில் ஒரு சில ஒன்றியங்களில் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சிதம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஞான அற்புதராஜ் ஆகியோர் கூட்டாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
.
அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையின் பயனாக தமிழக அரசு கடந்த ஜனவரி-2016 முதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. இதில் தொடக்கப்பள்ளிகளுக்கு ஒரு மாதத்திற்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ750ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ300ம் என மொத்தம் ரூ1050 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல நடுநிலைப்பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ1000ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ500ம் என மொத்தம் ரூ1500ம், உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ1500 உடன் ரூ750 சேர்த்து மொத்தம் ரூ2250 எனவும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ2000த்துடன் ரூ1000 சேர்த்து மொத்தம் ரூ3000 என ஒதுக்கீடு செய்து அரசு செயல்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. இதில் தலைவர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் இணைந்து கூட்டாக வங்கியில் கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. துப்புரவு நிதியானது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அதன்பின் தலைமையாசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழுவை கூட்டி உரிய தீர்மானம் நிறைவேற்றி அதனடிப்படையில் வங்கிக்கு சென்று கூட்டாக பணம் எடுக்க வேண்டும். எடுத்த பணத்தில் துப்புரவு பொருட்களுக்கு உரிய தொகையை மட்டும் தலைமையாசிரியர்கள் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியரின் ஊதியத்தை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் (PLF) வங்கி கணக்கில் நேரடியாக சென்று செலுத்த வேண்டும். அதன் பின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.
ஆனால் மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஒன்றியங்களில் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தலைமையாசிரியர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நிதியில்லை என கை விரிக்கின்றனர். எனவே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கி ஊதியம் வழங்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)