பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

5/16/2011

ஜெயலலிதா அமைச்சரவையின் 33 அமைச்சர்கள்: ஒரு பார்வை

சென்னை: ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குறித்த ஒரு பார்வை...

ஓ.பன்னீர் செல்வம்

போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். 60 வயதாகும் பன்னீர்செல்வம், பி.ஏ. படித்தவர். பெரியகுளம் நகராட்சியின் தலைவராக இருந்துள்ளார்.

முதல் முறையாக 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதா மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது 6 மாத காலத்திற்கு முதல்வர் பதவியை வகித்தார் ஓ.பன்னீர் செல்வம்.

பின்னர் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது பன்னீர் செல்வம் பொதுப் பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

எளிமையானவராக அறியப்படும் ஓ.பன்னீர் செல்வம் தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். ஜெயலலிதா எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அளவுக்கு தீவிரமான அதிமுக விசுவாசியும் கூட.

இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என இரு மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர்.

கே.ஏ.செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் விசுவாசிகள் படையின் தளபதி செங்கோட்டையன். திட்டமிடுதலில் சிறந்தவரான இவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பவர்.

அடக்கமாக இருப்பார் அதேசமயம் எதை செய்தாலும் ஆணித்தரமாக செய்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுபவர். ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக தொடர்ந்து பலமுடன் இருக்க செங்கோட்டையனின் தீவிரப் பணிகளும் ஒரு காரணம்.

விவசாயியானசெங்கோட்டையன் இன்றளவும் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் அமைச்சராவது இது 2வது முறையாகும்.

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 6வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும் செங்கோட்டையன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், கதிர் என்ற மகனும் உள்ளனர்.

ஆர். விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து அமைச்சராக செயல்பட்டார். இந்த முறை மின்சாரத் துறை அமைச்சராகியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

சொந்த செல்வாக்குடன் கூடிய வெகுசில அதிமுக தலைவர்களில் இவரும் ஒருவர். 62 வயதான விஸ்வநாதன் பிஎஸ்சி படித்தவர். திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருக்கும் விஸ்வநாதனுக்கு அமர்நாத் என்ற மகனும், கவிதா,
ரஞ்சிதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

கே.பி.முனுசாமி

59 வயதான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். மிகவும் முக்கியமான உள்ளாட்சித் துறையை இவருக்குக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

பி.ஏ., பி.எல் படித்துள்ளமுனுசாமி கவுண்டர் ஆவார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

சி.சண்முகவேலு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகவேலு. தொழில்துறை அமைச்சராகியுள்ளார். எம்.ஏ. படித்துள்ள இவர் கொங்கு வேளாள கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்.

ஆர்.வைத்திலிங்கம்

ஒரத்தநாடு தொகுதியின் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம். வீட்டு வசதித்துறை அமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் பதவியை இவர் ஏற்பது இது 2வது முறையாகும்.

பி.ஏ. படித்துள்ள வைத்திலிங்கம் 2001ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தொழில்துறை அமைச்சரானார். பின்னர் வனத்துறைக்கு மாற்றப்பட்டார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார். அமைச்சராவது இது அவருக்கு முதல் முறை.

எஸ்.கருப்பசாமி

சங்கரன்கோவிலைச் சேர்ந்த கருப்பசாமி மிகவும் எளிமையானவர். கால்நடைத்துறை அமைச்சராகியுயள்ளார். கருப்பசாமி அமைச்சராவது இது 2வது முறையாகும்.

பி.பழனியப்பன்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து வென்று முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே உயர் கல்வித்துறை என்ற உயரிய துறையைப் பெற்றுள்ளார் பழனியப்பன்.

எம்.எஸ்.சி படித்துள்ள இவர் விவசாயம் செய்து வருகிறார். மனைவி, ொரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சி.வி. சண்முகம்

ஜெயலலிதாவின் படைத் தளபதிகளில் இவரும் ஒருவர். பாமகவையும், டாக்டர் ராமதாஸையும் மிகக் கடுமையாக எதிர்ப்பவர்களில் இவரும் ஒருவர். பாமகவின் தீவிர பாலிட்டிக்ஸை சமாளித்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்.

கடந்த ஆட்சியில் இவர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகியுள்ளார்.

இவரது தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பியாக இருந்தவர்.

செல்லூர் ராஜு

முதல் முறையாக அமைச்சராகியுள்ளார் செல்லூர் ராஜு. மதுரை திமுக ஜாம்பவான் மு.க.அழகிரியின் வீடு அடங்கியுள்ள மதுரை மேற்குத் தொகுதியில் அபார வெற்றி பெற்று அதற்குப் பரிசாக அமைச்சர் பதவியைப் பிடித்துள்ளார் ராஜு.

முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த செல்லூர் ராஜு, உள்ளூர் அதிமுகவினரின் போட்டிகளையும் சமாளித்து அதிமுகவில் முக்கிய இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.டி.பச்சமால்

கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பச்சமால். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பச்சமாலுக்குச் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள தம்மத்துக்கோணமாகும்.

1979ம் ஆண்டிலிருந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் பச்சமால், அதிமுகவில் குமரி மாவட்ட கிழக்கு செயலாளராக செயல்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகியுள்ள பழனிச்சாமி அடிப்படையில் ஒரு சிவில் என்ஜீனியர் ஆவார். பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி பின்னர் அதை உதறி விட்டு அதிமுகவில் இணைந்தார்.

நீண்ட காலமாக அதிமுகவில் செயல்பட்டு தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். சேவல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஜெயலலிதா அணி சார்பில் எம்.எல்.ஏ. ஆனவர்களில் இவரும் ஒருவர்.

எஸ்.பி.சண்முகநாதன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் சண்முகநாதன். தற்போது இந்து அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார்.

இவர் கடந்த 2001-ம் ஆண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்றவர். அப்போது கைத்தறி துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கே.வி.ராமலிங்கம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவரான ராமலிங்கம் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே பொதுப்பணித்துறை அமைச்சராகியுள்ளார் ராமலிங்கம்.

மடத்துக்குளம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராமலிங்கத்திற்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி

முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு அமைச்சராகியுள்ளார் எஸ்.பி.வேலுமணி.முதல் முறையாக இவர் அமைச்சராகியுள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ள வேலுமணி, எம்.ஏ. எம்.பில் படித்தவர். குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தவர்.

டி.கே.எம்.சின்னையா

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் முதல் முறையாக நுழைகிறார் சின்னையா. 48 வயதான பி.ஏ. பட்டதாரியான இவர் தாம்பரத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அதிமுக நகரச் செயலாளாக இருந்து வருகிறார்.

நகராட்சி கவுன்சிலராக செயல்பட்டு வந்த சின்னையா, சட்டசபைத் தேர்தலில் நின்று போட்டியிட்டு வென்றுள்ளார். தற்போது அமைச்சர் பதவியும் இவரைத் தேடி வந்துள்ளது.

மு.சி. சம்பத்

2வது முறையாக அமைச்சராகியுள்ளார் மு.சி.சம்பத். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான சம்பத் கடலூர் தொகுதியில் சட்டசபை உறுப்பினராகியுள்ளார்.

கடந்த 2001 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வென்று வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.

பி.தங்கமணி

முதல் முறையாக அமைச்சராகியுள்ள தங்கமணிக்கு, வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்.

ஜி.செந்தமிழன்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து 2வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்துள்ள செந்திழன், செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வழக்கறிஞரான இவர் அதிமுகவில் மாணவர் அணியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது தென் சென்னை மாவட்ட செயலாளராக செயல்படும் செந்தமிழன், 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கோகுல இந்திரா

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான கோகுல இந்திரா, சிவகங்கையில் வக்கீலாகப் பணியாற்றியவர். அரசியலில் படிப்படியாக முன்னேறிய கோகுல இந்திரா சிறந்த பேச்சாளர். இதனால் அவரை ராஜ்யசபா எம்.பியாக்கினார் ஜெயலலிதா. 2001 முதல் 2007 வரை ராஜ்யசபா உறுப்பினராகப் பணியாற்றிய கோகுல இந்திரா, அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். தற்போது அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாகி அமைச்சராகியுள்ளார்.

செல்வி ராமஜெயம்

புவனகிரி சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வி ராமஜெயம், 2 முறை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவியாக இருந்தவர். தற்போது சமூக நலத்துறை அமைச்சராக முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

பி.வி.ரமணா

முதல் முறையாக அமைச்சராகியுள்ள ரமணா, எம்.எல்.ஏ. பதவிக்கு வந்துள்ளதும் முதல் முறையாகும்.

கம்மவார் வகுப்பைச் சேர்ந்த இவர் பார்மஸி படித்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

ஆர்.பி.உதயக்குமார்

முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த உதயக்குமார் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். வழக்கறிஞரான உதயக்குமார் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் அதிமுக மாணவர் அணிச் செயலாளராக செயல்பட்டவர்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்.

முதல் முறையாக எம்.எல்.ஏவாகியுள்ள உதயக்குமார், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார்.

ந.சுப்பிரமணியன்

கந்தர்வகோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ந.சுப்பிரமணியன். இவர் விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியைச் சேர்ந்தவர். சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர் முதல் முறையாக எம்எல்.ஏவாகி அமைச்சர் பதவியையும் அடைந்துள்ளார்.

செந்தில் பாலாஜி

கரூர் தொகுதியிலிருந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, உள்ளூர் அதிமுகவில் பல போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வெற்றி பெற்று தற்போது அமைச்சர் பதவி என்ற ஜெயலலிதாவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

கரூர் மாவட்ட செயலாளராக இருந்து வரும் செந்தில் பாலாஜி, பி.காம். பட்டதாரி. 2000-ம் ஆண்டில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளராக பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து தற்போது அமைச்சர் பதவியை எட்டியுள்ளார்.

மரியம்பிச்சை

கே.என். நேருவை படு தோல்வியடையச் செய்ததால் பரிசாக அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார் மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள மரியம் பிச்சை, பி.ஏ. படித்தவர். இவர் எம்.எல்.ஏ ஆவதும் இதுவே முதல் முறையாகும்.

கே.ஏ.ஜெயபால்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சராகியுள்ளார். முதல் முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ள ஜெயபால், அமைச்சர் பதவிக்கு வருவதும் இதுவே முதல முறையாகும். நாகை மாவட்ட அதிமுக பொருளாளர் பொறுப்பையும் தற்போது ஜெயபால் வகித்து வருகிறார்.

இசக்கி சுப்பையா

அம்பாசமுத்திரம் தொகுதியில், ஆவுடையப்பனை வீழ்த்தி ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவரான இசக்கி சுப்பையா சட்ட அமைச்சராகியுள்ளார்.

முதல் முறையாக எம்.எல்.ஏவான இவர் பெரும் தலையை வீழ்த்தியதால் அமைச்சர் பதவியையும் பரிசாக பெற்றுள்ளார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.

புத்திசந்திரன்

நீலகிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தி சந்திரன், படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சுற்றுலா அமைச்சராகியுள்ளார். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் உயர்வது இதுவே முதல் முறை என்பதால் படுகர் சமுதாயமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


சி.த.செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி தொகுதியிலிருந்து வென்றுள்ள செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகியுள்ளார். காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவரான செல்லப்பாண்டியன் அமைச்சர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

எம்ஏ படித்துள்ள இவருக்கு இந்திரா என்ற மனைவியும், ராஜாசிங், ஜெபசிங் ஆகிய 2 மகன்களும், எஸ்தர் தங்கமணி என்ற மகளும் உள்ளனர்.

டாக்டர் வி.எஸ்.விஜய்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ்.விஜய், வேலூர் அரசு
மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர். இவருடைய மனைவி ஜெயந்தி. மகள் டாக்டர் அனிதா, மகன் அருண் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

டாக்டர் வி.எஸ்.விஜய் அரசு டாக்டர்கள் சங்க வேலூர் மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பணியாற்றியவர். கட்சியில் மருத்துவப்பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். முதன்முறையாக வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் தொகுதியிலிருந்து தொடர்ந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த ஞானசேகரனை வீழ்த்தியதால் அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது.

என்.ஆர்.சிவபதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான அறிவிக்கப்பட்டுள்ள சிவபதி 1963-ல்
பிறந்தவர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார்.

1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை
செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார்.

முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார் சிவபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக