கருவறையைவிட்டு வெளியேறும் குழந்தையின் முதல்தேவை உயிர்வாழ உணவு. அடுத்த தேவை அதன் உயர்வுக்கான கல்வி. அறியாமை இருள் நீங்கினால்தான், ஒருநாடு ஒளிமயமாக இருக்கும். இளமைக் காலத்தில் வளமான கல்விக்குப் பதில், வறுமை கொடுமையில் வாழ்க்கை பாரத்தை சுமந்தால், அந்நாடு முன்னேற்றம் காண முடியவே முடியாது. எனவே குழந்தை தொழிலாளரே இல்லை என்ற நிலையை உருவாக்குவது அரசின் கடமை.
கல்வி ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. எனவே கல்விக்காக ஆயிரமாயிரம் கோடிகளை கொட்டுகின்றன மத்திய, மாநில அரசுகள். இருந்தும் கல்விச் சாலைக்கு செல்ல வேண்டிய சிறுவர்கள் கடின உழைப்பில் ஈடுபடுகின்றனர். அபாயகர பணிகளையும் ஏற்று, தங்கள் உயிருக்கே உலை வைக்கின்றனர். வறுமையே இந்த வாழ்க்கை அவலத்திற்கு முதற்காரணம். எனவே வரும்காலங்களில் வறுமையை வெறுமையாக்குவதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்: உலகில் குழந்தை தொழிலாளர் முறையே முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர், இதில் 10 கோடி பேர் பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என “யுனிசெப்’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. வரும் 2016ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை அறவே ஒழிக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.
எது குற்றம் : உலகில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாக உள்ளது. சில குழந்தைகள் பள்ளி முடித்தவுடன் சில குழந்தைகள் பகுதி நேரமாக வேலைக்குச் செல்கின்றனர். மேலும் சிலர் தங்களது பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக கருதப்படமாட்டார்கள். ஆனால் கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமை, உடல், மனம், சமூகம் ஆகியவை பாதிக்கும் வகையில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது குற்றம் என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு வரையறுத்துள்ளது. இந்திய அரசும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றம் என தெரிவிக்கிறது.
இந்தியா அதிகம் : உலகில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 14 சதவீதம் இந்தியாவில் உள்ளனர் . இது இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களின் நிலை எந்தளவுக்கு பரிதாபமாக உள்ளது என்பதை காட்டுகிறது. விவசாயம், தீப்பெட்டி. செங்கல் சூளை, டெக்ஸ்டைல் உள்ளிட்ட தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் வேலையில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலைபார்க்கின்றனர். வார விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் கொத்தடிமைகள் போல வேலை பார்க்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சிலர் வற்புறுத்தல் காரணமாகவும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வறுமை ஒழிப்பு : இந்தியாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை முழு அளவில் நிறைவேற்றினால் அதிகளவிலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வர். ஏனெனில் பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாக தான், கட்டாயமாக வேலைக்கு அனுப்பப் படுகின்றனர். எனவே முதலில் இக்குழந்தைகளின் பெற்றோர்களின் வருமானத்துக்கு அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். வறுமை ஒழிந்தால் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றலாம்.
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக