சென்னை, ஜூன் 19: பழைய பாடத்திட்டத்தின் கீழ் புதியப் புத்தகங்களை அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதற்காக 100 சதவீதப் பணி ஆணைகள் வழங்கப்பட்டு விட்டதாக பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட இருந்தது. இதற்காக, 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் சமச்சீர் கல்வி முறை இல்லை என்று கூறி இந்த ஆண்டு பழைய பாடத்திட்டமே அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான சட்டத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 1,6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியையே பின்பற்ற வேண்டும் என்றும், பிற வகுப்புகளுக்கு இதை அறிமுகப்படுத்துவது தொடர்பாக குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, 1, 6-ம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி புத்தகங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்டன.செம்மொழி மாநாட்டு இலச்சினை, கவிஞர் அப்துல் ரகுமானின் பாடல் உள்ளிட்ட பகுதிகள் தாள்கள் மற்றும் மையிட்டு மறைத்து வழங்கப்பட்டன.அச்சிடுவது நிறுத்தம்: இந்த நிலையில், பழைய பாடத்திட்டத்தின் கீழ் 1,6-ம் வகுப்புகளுக்கு 1.33 கோடி புத்தகங்களை அச்சிடுவதற்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த வகுப்புகளில் சமச்சீர் கல்வியை அமல்செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட பிறகும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் அச்சிடும் பணி தொடர்வது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து, 1,6 வகுப்புகளுக்கான பழைய பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்துமாறு அதிகாரிகள் பதிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த வகுப்புகளுக்காக இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.பிற வகுப்புகளுக்கான புத்தகங்கள்: மீதமுள்ள 8 வகுப்புகளுக்காக 5 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட வேண்டியுள்ளது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு பணி ஆணைகள் வழங்கப்படும்போது வங்கி உத்தரவாதம், இன்சூரன்ஸ் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு சமச்சீர் கல்வி குறித்து ஆராய்ந்தாலும், புதிதாகப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தடை எதுவும் இல்லை. எனவே, பழைய பாடத்திட்டத்தின் கீழ் புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை பல லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.சமச்சீர் புத்தகங்களைப் போல் கலர் அட்டைகளால் இந்தப் புத்தகங்களை பைன்டிங் செய்ய முடிவு செய்திருந்ததாகவும், ஆனால், அட்டைகள் கிடைக்காததால் சாதாரண அட்டைகளையேப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது. புத்தகங்களைப் பைன்டிங் செய்ய ஆள்கள் கிடைக்காததால் இந்தப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.பில்கள் தேக்கம்: புத்தகங்களை அச்சிட்டதற்காக பதிப்பாளர்களுக்கு தர வேண்டிய தொகையை அதிகாரிகள் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பில்களுக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருப்பதாக அதிகாரிகள் மீது பதிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.நிலுவைத் தொகையை வழங்கினால் மட்டுமே புத்தகங்களை விரைந்து அச்சிட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக