சென்னை:ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், விரைவில் 1,200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,058 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளும், 290 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில், இரண்டரை லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சமுதாய மாணவர்கள், கல்வி கற்பதற்காக, பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையிலும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் புதிதாக, 1,200 ஆசிரியர்களை விரைவில் நியமிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்களை தேர்வு செய்து தரக்கோரி, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், ஆதிதிராவிடர் நலத்துறை கேட்டுள்ளது.
எனினும், ஆசிரியர் நியமனத்தில், தமிழக அரசு, இன்னும் எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்காமல் இருப்பதால், பல்வேறு துறைகளுக்கான ஆசிரியர் நியமனப் பணிகள் கிடப்பில் இருந்து வருகின்றன. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்கள் தவிர, மற்ற அனைத்து வகையான ஆசிரியர்களும், போட்டித்தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து ஆசிரியர்களும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த முறை, எந்த அடிப்படையில், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, தெரியாத நிலை இருக்கிறது. கட்டாயக் கல்வி சட்டத்தில், தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பதிவு மூப்பு சீனியாரிட்டி ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எனினும், சமச்சீர் கல்வி விவகாரத்தால் எழுந்துள்ள பிரச்னைகள் காரணமாக, ஆசிரியர் நியமன விவகாரத்தில், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.இதனால், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறைக்கான ஆசிரியர் நியமனப் பணிகள் கிடப்பில் உள்ளன. சமச்சீர் கல்வி பிரச்னை முடிந்ததும், ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட, பல்வேறு பணிகளில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக