செய்தி கேட்டபின் என்னால் சகயமாக இயங்க முடியவில்லை. நேற்று இரவு இதன் தாக்கத்தை உணர்ந்தேன். விழிகளை மூடும் போதும் அம் மூன்று உருவங்களும் கண்முன்னே வந்து விரிகிறது. அவர்களை பெற்றவர்களும், அவர்கள் உறவுகளும் விடும் கண்ணீர் என் மனதையும் வந்து நனைத்து கனக்க வைக்கிறது.
நாள் குறித்து தன்மகனை பலிகொடுப்பதென்பது ஒரு தாய்க்கு எவ்வளவு கொடுமையான விடயம் என்று உணரமுடியாத அளவுக்கு நான் ஒன்று மரத்துப்போய்விடவில்லை.
ஒருவேளை, முசோலினி வாரிசுகளுக்கு அந்த தேவை இருக்காலம். கூடவே ஆசனங்களை தக்கவைக்க அந்த வாரிசுகளின் கால்பிடித்து இயங்கும் எடுபிடிகளுக்கும் இது சரியாக படலாம். ஆனால், ஒரு தாயாக அம்மையாருக்கும், மகவுகளை கொண்ட அவர்தம் எடுபிடிகளுக்கும் புரியாமல் போனது எங்கனம்?
ஆயிரக்கணக்கில் மக்கள் சாக காரணமான அன்டர்சனை தப்பிக்கவைத்த குற்றத்துக்காக, இன்று தந்தைக்காக தனையன் தூக்கு கயிற்றில் ஏறட்டும். அப்பொழுதாவது புத்திர சோகம் என்னவென்று புரியுதா பார்க்கலாம் இந்தப்பெண்மணிக்கு .
நாளை ஒரு பொழுதிலே, ஆட்சிகள் மாறிய தருணத்திலே , இந்த மூவரும் குற்றமற்றவர்கள் என்று முழுமையாக நிரூபிக்கப்பட்டால், இழந்து போன உயிரை மீட்டு கொடுப்பார்களா? இல்லை பாலைவனமாகி போல இருபத்தியொரு வருடங்களையும் பின்னோக்கி நகர்த்துவார்களா?
ஈழத்தமிழனாக இந்த நொடியும் நம்புகிறேன்; ஆறுகோடி தமிழர்களும் அந்த அப்பாவி உயிர்களை ஒரு போதும் தூக்கு கயிற்றுக்கு முன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்று..
நான் என்ன செய்வேன்! நாதியற்ற இனத்திலல்லவா பிறந்துவிட்டேன். ஆனால், "நான் நாமானால்" நம்மால் முடியாதது எதுவுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக