சிவகங்கை : ஆசிரியர்களுக்கான பிரத்யேக அடுக்கு முறை கூட்டம் நடத்தாததை கண்டித்து ஆசிரியர் சங்கங்கள் போராட முடிவு செய்துள்ளன.ஆசிரியர் சங்கங்களின் கூட்டத்தை மாவட்ட கல்வி அலுவலர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தி குறைகளை தீர்க்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. பங்கேற்க தகுதியுள்ளவர்களை மாவட்ட கல்வி அலுவலர் தான் அழைக்க வேண்டும். கல்வி மாவட்ட அளவில் உள்ள குறைகளை, மாவட்ட அதிகாரியே உடனடியாக தீர்க்க வேண்டும். தீர்க்க முடியாத குறைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தீர்க்க வேண்டும். ஆனால் ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் பல ஆண்டுகளாக நடத்தவில்லை. இதில் தான் ஆசிரியர்களின் குறைகளான ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு, சேமநல நிதி, சான்றிதழ் உண்மை தன்மை அறிதல், தகுதிக்கான பருவம், மகப்பேறு விடுப்பு, மாற்றுப்பணி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். மாவட்ட அளவில் நடத்த வேண்டிய கூட்டத்தை மாலை நேரங்களிலோ, விடுமுறை நாட்களிலோ நடத்தலாம். பெரும்பாலான மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியூர்களில் இருந்து வருவதால், இந்த கூட்டத்தை கூட்ட விரும்புவதில்லை. ஆசிரியர்களின் குறைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது.தமிழக தமிழாசிரியர் கழக மாநிலத்துணை செயலர் இளங்கோ,உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முத்துச்சாமி கூறியதாவது: பள்ளி கல்வித்துறையில் அடுக்குமுறை கூட்டம் நடத்த உத்தரவு உள்ள போதிலும், மாவட்ட அளவில் கூட்டங்கள் நடந்ததே இல்லை. ஆசிரியர்களின் குறைகள் தீர்க்கப்படாமல் தள்ளிப்போடப்படுகிறது. கூட்டத்தை முறையாக நடத்த அரசு உத்தரவிட வேண்டும். இதே போன்று ஆசிரியர் தினவிழாவை, குழு அமைத்து கொண்டாடுவதில்லை. கலை இலக்கிய போட்டிகளை தமிழாசிரியர்கள் மூலம் நடத்த வேண்டும். இவற்றை தலைமை ஆசிரியர்களை வைத்தே நடத்தி விடுகின்றனர். ஆசிரியர்களின் குறைகளை தீர்த்து வைக்க கோரி மாநில அளவில் முதற் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக