பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/05/2011

சொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை


கற்றல், கற்பித்தல் என்கிற நிலையைத் தாண்டி, திருக்குறளை அனைத்து இடங்களிலும் பரவச் செய்வதை, தன் வாழ்நாள் கடமையாகச் செய்து வருகிறார் பள்ளி ஆசிரியை ரூபி ரெஜினா.
காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ரூபி ரெஜினா ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன், பாடத்தில் இருந்த திருக்குறள்களை மட்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு, அதிலிருந்த கருத்துச் செறிவுகள் பிடித்துப் போக, ஒட்டுமொத்த நூலையும் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.பள்ளிப் பாடநூலில் இருபது திருக்குறள்கள் இருந்தால், பத்து மனப்பாடப் பகுதியாக இருக்கும். அதைப் படிப்பதற்கே மாணவர்கள் திணறிவிடுவர்.
இதைக் கருத்தில் கொண்ட ரூபி, அனைத்து திருக்குறள்களையும் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு என்று அறிவித்திருக்கிறார். அறிவித்தபடியே திருக்குறள் நூலையும் பரிசளித்திருக்கிறார். அதற்கடுத்த முயற்சியாக, 100 குறள் சொன்னால் 100 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார். மாணவர்களிடையே உற்சாகம் கூட, குறள்களின் எண்ணிக்கைக்கேற்ப பரிசுத்தொகையையும் உயர்த்தியிருக்கிறார்.
திருக்குறளை மக்களிடமும் சேர்க்க வேண்டுமானால், ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என்று நினைத்த ரூபி, 2007ல் "உலகப் பொதுமறை மன்றத்தை" தொடங்கியிருக்கிறார். தான் வாங்கும் சம்பளத்தில், 5,10 புத்தகங்களாக வாங்கி வழங்கிக் கொண்டிருந்த ரூபிக்கு, நிறைய திருக்குறள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது.
ரூபி கொடுக்க நினைத்தது, 100, 200 புத்தகங்கள் அல்ல. 1330 குறள்களை 100 மடங்காக்கி, ஒரு லட்சத்து 33 ஆயிரம் புத்தகங்கள்(!) வழங்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அதற்கான பொருளாதார வசதியில்லை . இருந்தும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற, புறநகர் பகுதியில் வாங்கிப் போட்டிருந்த நிலத்தை, 24 லட்சத்திற்கு விற்று, புத்தகங்களை வாங்கிவிட்டார்.
நிலத்தை விற்று திருக்குறள் புத்தகம் வாங்கும் அளவிற்கு, திருக்குறள் மீது அப்படி என்ன பற்று என்று கேட்டபோது, "இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் பின்பற்றக் கூடிய உன்னதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம் எது என்றால் நிச்சயம் அது திருக்குறள் தான். திருக்குறளை நம் வாழ்விற்கான மையக் கருவாகக் கொண்டு வாழ்ந்தோமானால், அதை விட சிறப்பான வாழ்க்கை எதுவுமில்லை. அக, புற வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும், திருக்குறளில் இருக்கின்றன.
ஒவ்வொரு குடிமகனும் திருக்குறளை நெஞ்சில் நிறுத்தி, அதன்படி வாழ்ந்தால் உலகில் எவ்விதமான குற்றங்களும் நிகழாது. திருக்குறள் என் வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது. இந்தச் சேவையை, என் உறவினர்கள் பலவாறாய் விமர்சிக்கிறார்கள். ஆனால், இது எனக்கு மனநிறைவைத் தருகிறது" என்கிறார் ரூபி. இவரின் திருக்குறள் ஆர்வத்தை கண்ட பல்வேறு அமைப்புகள், இவருக்கு தங்கள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளன.
"கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது, 133 கவிஞர்கள் கவி பாடிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மிகவும் சந்தோஷமான தருணம்" என நெகிழும் ரூபி, சிறைக் கைதிகளையும் விட்டு வைக்கவில்லை.
விடுமுறை நாட்களில், மத்திய சிறைச் சாலைகளுக்குச் செல்லும் ரூபி, திருக்குறள் நூலை வழங்கி, அதிலுள்ள அறிவுரைகளை கடைபிடிக்கும்படி வலியுறுத்துகிறார். புத்தகங்களை வழங்குவதில் மட்டுமல்ல, பரிசு கொடுப்பதிலும் ரூபி பிரமிப்பூட்டுகிறார். 1330 குறள்களை மனப்பாடமாகச் சொல்லும் முதல் 33 பேருக்கு, 10,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஏழு பேருக்கு வழங்கியும் விட்டார்.
திருக்குறளுக்காய் தன்னை அர்பணித்துவிட்ட இப்பெண்மணிக்கு, திருக்குறள் மாமணி, குறள்நெறிச் செல்வி, குறள் அரசி, தமிழ்த்தென்றல் உள்ளிட்ட 44 விருதுகளை பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ளன. இந்தச் செலவுகளுக்காக, யாரிடமும் பணம் வாங்காத ரூபிக்கு, "திருக்குறள் தியான மண்டபம்" அமைக்கும் ஆசை உள்ளது. இப்பணிக்காக நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார். ரூபி நிச்சயம் இதனை செய்து முடிப்பார்.
எப்படி என்பதற்கு விடையாக ஒரு திருக்குறள் சொல்கிறது...
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்
ஒரு பொருளை அடைய எண்ணி, அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராய் இருந்தால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக