"பள்ளிக் கல்வித் துறையில், 29,849 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்' என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை அமல்படுத்த, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆசிரியர் நியமன முறையில், அரசு எவ்வித கொள்கை முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், முதல்வரின் அறிவிப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், மக்களை மகிழ்விக்கும் வகையில், விதி 110ன் கீழ், தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, அனைவரையும் திக்குமுக்காடச் செய்தார், முதல்வர் ஜெயலலிதா. முதல்வரின் அறிவிப்பு மழையில், பள்ளிக் கல்வித் துறையும் தப்பவில்லை.
அறிவிப்பு மட்டும் போதுமா?
ஆகஸ்ட் 26ம் தேதி, "775 பள்ளிகள் தரம் உயர்வு, 9,735 பட்டதாரி ஆசிரியர்கள், 3,565 இடைநிலை ஆசிரியர்கள், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர்' என்பது உட்பட, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார், முதல்வர் ஜெயலலிதா.பெரும்பாலான அரசுப் பள்ளிகளில், 80 மாணவர்களுக்கு - ஒரு ஆசிரியர் என்ற நிலை தான் இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காகவே, 13,300 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.இவற்றில், தரம் உயர்த்துதலுக்கான நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்பட்டு வருகின்றன.முழு நேர, பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான நடவடிக்கைகள், இதுவரை துவங்கப்படவில்லை.நடப்பு கல்வியாண்டின் பாதி காலம் முடிய உள்ள நிலையில், முதல்வரின் அறிவிப்பை அமல்படுத்த, பூர்வாங்க நடவடிக்கை கூட இதுவரை எடுக்கப்படவில்லை.
கொள்கை இல்லாததால் குழப்பம்
ஆசிரியர் நியமன விவகாரம் கிடப்பில் இருப்பதற்கு, ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறை குறித்து, இதுவரை கொள்கை முடிவு எடுக்காதது தான் காரணம்.அ.தி.மு.க., ஆட்சி என்றால், போட்டித் தேர்வு மூலம், ஆசிரியர்களைத் தேர்வு செய்வது வழக்கம். மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்விச் சட்டத்தில், "ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களை, போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள் (ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்) மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், நியமனத்திற்கு தேர்வு நடத்த வேண்டும். முதுகலை ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறை குறித்து, மத்திய அரசு எதுவும் கூறவில்லை.இந்த குழப்பங்களால், ஆசிரியர் நியமன முறை குறித்து, தமிழக அரசு இதுவரை எவ்வித முடிவும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது. இதுவே, முதல்வரின் அறிவிப்பு அமலுக்கு வரவும் தடையாக உள்ளது.