பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/10/2011

கல்விக் கடன் : ஒரு விரிவான அலசல்

தமிழகத்தில் கல்விக் கடன் பெறும் மாணவர் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில், இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை, 43 ஆயிரம் கோடி ரூபாய். இன்றைய நிலையில் வசூல் ஆகாத கல்விக் கடன் தொகை, 3 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
இப்போது, கல்விக் கடனில் மத்திய அரசு அறிவித்துள்ள தாராள கொள்கையால், வாராகடன் தொகை மேலும் அதிகரிக்கும் என, வங்கி துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இரு மடங்கு : தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், கல்விக் கடன் பெற்றோர் எண்ணிக்கை 1.48 லட்சம். தற்போது, இது 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, தேசிய அளவிலும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. வங்கிகளின் ஆண்டு கடன் பட்டியலில் இருந்து கணிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் நாடு முழுவதும் இதுவரை, 43 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் வசூல் ஆகாத கல்விக் கடன் 3 ஆயிரம் கோடி ரூபாய்.
அரசு தாராளமாக கல்விக் கடன் வழங்கி வருவதை, வங்கித் துறை நிபுணர்கள் வரவேற்கின்றனர். ஆனால், கடனை திருப்பி வசூலிக்க மூக்கணாங்கயிறு தேவை என்கின்றனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத தேசிய வங்கியின் மூத்த நிர்வாகி, "கடனை திருப்பிச் செலுத்தும் வழிமுறைகள் சிறப்பாக இல்லை. சொத்து ஈடு ஏதும் தேவையில்லை என்பதால், மாணவர் படிப்பை முடித்து, வெளி இடங்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டால், அவர் மனது வைத்து பணத்தை திருப்பி செலுத்தினால் தான் உண்டு" என, தெரிவித்தார்.
பெற்றோருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லாததால், அவர்களும் வேறு இடங்களுக்கு மாறிவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது.கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்ட கடன்களுக்கே, வசூல் ஆகாத கடன் தொகை தற்போது 3 ஆயிரம் கோடி ரூபாய்.
"இப்போது எந்த உத்தரவாதமும் இல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகளவில் கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் தொகை எந்தளவில் வசூலாகும் என்பது, இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்னரே தெரிய வரும்" என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
உயர் கல்வி முடித்தவர்கள் அனைவருக்கும் வேலை உத்தரவாதம் என்பது இல்லை. இருப்பினும், நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள் வேலை பெறுவார்கள் என்ற நம்பிக்கையில், வங்கிகள் இதுவரை கடன் கொடுத்து வந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது.
இதுகுறித்து, மற்றொரு வங்கி அதிகாரி, "இப்போது கல்லூரியில் அனுமதி கிடைத்தால் போதும் கடன் கொடு என்கின்றனர். 50 சதவீதமும், அதற்கும் குறைவாக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், பொறியியல் கல்லூரியில் நல்ல மதிப்பெண் எடுத்து, நல்ல வேலைக்கு செல்வார்கள் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு மட்டுமே கல்விக் கடன், என்றாவது விதிகளை திருத்தலாம்" என, கூறினார்.
உலக பொருளாதாரம் சோர்வு அடைந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரமும் அதே நிலைக்கு தள்ளப்படும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தற்போது கல்விக் கடன் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு குறையும் என்ற அச்சமும் உள்ளது.
உயர்கல்வி பெற பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நல்ல நோக்கத்துடன், கல்விக் கடன் வழங்குவதில் மத்திய அரசு தாராளம் காட்டி வருகிறது. இதற்கு முன், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், கடனுக்கு பெற்றோரின் சொத்துகளை ஈடாக காட்ட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் கடன் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் படிப்புகள் படிக்க அனுமதி கிடைத்தால் போதும், தாராளமாக கல்விக் கடன் வழங்குமாறு, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நான்கு லட்சம் ரூபாய் கடன் வரை, ஈடாக சொத்து மதிப்பு எதையும் கேட்கக் கூடாது என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கடனுக்கான வட்டி, மானியமாக வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
சென்ட்ரல் பாங்க் முன்னாள் துணை பொது மேலாளர் கோபால கிருஷ்ணன் கூறும்போது, "கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில்
இருப்பவர்களுக்கு, இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தலாம். கடன் பெறும் மாணவரின் பெற்றோரிடம் ஒரு பங்கும், அரசு மானியமாக ஒரு பங்கும், பிரீமியத் தொகையாக செலுத்தலாம். கடனை திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளவர்களிடம் கடனை வசூலிக்க, பிடியை சற்று இறுக்குவதில் தவறில்லை"  என்றார்.
இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலர் ஸ்ரீதர் கூறியதாவது: பணத்தை வசூலிக்க மேலும் சில வழிமுறைகளை உருவாக்கலாம். இறுதியாண்டு படிக்கும் போதிலிருந்து மாணவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வங்கிக்கு வந்து பணத்தை திருப்பி செலுத்துவதற்கு உறுதியளிக்கலாம். மாணவரின் தொடர்பு விட்டுப் போகாமல் வங்கி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் பிரபல பொறியியல் கல்லூரி மாணவியின் தந்தை சரவணன் கூறும்போது, "கடனை திருப்பிச் செலுத்துவது எங்கள் கடமை. ஆனால், அரசு வட்டி மானியம் அறிவித்திருந்தும், பல வங்கிகளில் வட்டியை கட்ட சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு மாதம் வட்டி செலுத்தாவிட்டால் கூட, அந்த வட்டி தொகையை அசலுடன் சேர்த்து கூட்டு வட்டி போடுகின்றனர்" என்றார்.
இந்த புகார் குறித்து தேசிய வங்கியின் மேலாளர் ஒருவர் கூறும்போது, "வட்டி வசூலிக்கக் கூடாது என்பது தான் அரசின் உத்தரவு. கூட்டு வட்டியும் போடக் கூடாது. அவ்வாறு செய்தால் புகார் செய்லாம்" என்றார்.
கடன் வழங்க....
4 லட்சம் ரூபாய்- எந்த கட்டுப்பாடும் இல்லை
7 லட்சம் ரூபாய் வரை - பெற்றோர் உத்தரவாதம் வேண்டும்
7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து ஈடு வேண்டும்
கடனை வசூலிக்க...
வேலை கிடைத்து 6 மாதத்தில் அல்லது படித்து முடித்து 2 ஆண்டுகளில் அரசு மானியம் வழங்குவதால் ரூ.4 லட்சம் வரை வட்டி செலுத்த தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக