சென்னை:கணவரின் பென்ஷன் தொகையைப் பெற, இரண்டாவது மனைவிக்கு உரிமையில்லை. ஆனால், அவருக்கு பிறந்த குழந்தைகள் பெற உரிமையுள்ளது என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில், போர்மென் ஆக சாய்ராம் என்பவர் பணியாற்றினார். இவர், கிருஷ்ணவேணி என்பவரை, 1983ம் ஆண்டு திருமணம் செய்தார். முதலில் ஒரு குழந்தை பிறந்தது. கணவன் தன்னை சரிவர நடத்தவில்லை எனக் கூறி, தாயார் வீட்டுக்கு கிருஷ்ணவேணி சென்றார்.
கிருஷ்ணவேணியின் சகோதரரின் திருமணத்தின் போது, இருவரும் ஒன்று சேர்ந்தனர். அதையடுத்து, ஒரு குழந்தை பிறந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின், மனைவியை விட்டு சாய்ராம் பிரிந்து சென்று விட்டார். அதன்பின், மீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, இரண்டு குழந்தைகள்.பணியில் இருந்த சாய்ராம், 1995ம் ஆண்டு இறந்தார். அதையடுத்து, சட்டப்பூர்வமான மனைவி என்றும், கணவருக்கு வர வேண்டிய பென்ஷன் சலுகைகளைப் பெற, தனக்கு உரிமையுள்ளது என்றும் கேட்டு, மத்திய அரசு நிறுவனத்துக்கு, கிருஷ்ணவேணி கடிதம் அனுப்பினார்.அதற்கு, தனக்குரிய உரிமைகளைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தில் நாமினியாக மீராவை குறிப்பிட்டிருப்பதால், அவருக்கே பென்ஷன் தொகையை வழங்க முடியும் என, மத்திய அரசு நிறுவனம் பதிலளித்தது.சட்டப்படியான வாரிசு என்பதால், கணவருக்கு கிடைக்க வேண்டியதைப் பெற, தனக்கும், குழந்தைகளுக்குமே உரிமையுள்ளது எனக் கூறி, சென்னை குடும்ப நல கோர்ட்டில், கிருஷ்ணவேணி மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த குடும்ப நல கோர்ட், விண்ணப்பத்தில், நாமினியாக மீராவை குறிப்பிட்டிருப்பதால், அவருக்கே கணவருக்கு வர வேண்டிய பலன்கள் சேரும் என உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கிருஷ்ணவேணி, அவரது குழந்தைகள் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, விமலா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கைப் பொறுத்தவரை, சாய்ராமுக்கும், மீராவுக்கும், 1987ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் நடக்கும் போது, சட்டப்பூர்வமாக, 1983ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணவேணி, உயிருடன் இருக்கிறார். இந்த திருமணம் நிலுவையில் உள்ள போது, இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் பெற உரிமையில்லை. எனவே,கிருஷ்ணவேணியும், அவரின் குழந்தைகளும், பென்ஷன் தொகையை பெற உரிமையுள்ளது.
தனது வாழ்நாள் முழுவதும், கிருஷ்ணவேணியும், 25 வயது வரை குழந்தைகளும், பென்ஷன் பெற உரிமையுள்ளது. அதே நேரத்தில், மீராவுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும், பென்ஷன் பெற உரிமையுள்ளது. ஆனால், மீராவுக்கு உரிமையில்லை.எனவே, கிருஷ்ணவேணி, அவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் மீராவின் இரண்டு குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பென்ஷன் தொகையை, கணக்கிட்டு வழங்க வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக