முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான விண்ணப்பத்தில், அச்சுப் பிழை இருப்பதால், பட்டதாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், தற்போது காலியாக உள்ள, 2,895 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 16ம் தேதி முதல், அந்தந்த மாவட்டங்களில், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாட வாரியாக, அதிக அளவிலான பணியிடங்கள் நியமிக்கப்பட உள்ளதால், இதில் கலந்துகொள்ள, பட்டதாரிகளிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. பல மாவட்டங்களில், விண்ணப்பங்கள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன. இவ்விண்ணப்பம் ஓ.எம்.ஆர்., சீட் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கோடிங் ஷீட் என்பதால், இதில், அடித்தல், திருத்தல் இல்லாமல் நிரப்ப வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பத்தின் இரண்டாம் பக்கத்தில், எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்சி., - பி.எட்., பாடங்களில் தேர்ச்சியடைந்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பதிவுசெய்த தேதியை நிரப்புவதற்காக கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில், முதல் இரண்டு கட்டங்களில் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 19 என நிரப்பப்பட்டுள்ளது. அதனால், 1999ம் ஆண்டுக்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே, அடித்தல் - திருத்தல் இல்லாமல் பதிவு செய்ய முடியும்.
கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு, இதை நிரப்பும்போது திருத்தம் செய்யும் நிலை உள்ளது. இதனால், விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்யும் பட்டதாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கோடிங் ஷீட்டில், அடித்தல் - திருத்தல் செய்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடுமோ என்ற பயம், அனைவரிடமும் காணப்படுகிறது.
அதேபோல், பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஆண்டு, தேதி குறிப்பிடும் கட்டங்களிலும், 19, 20 என இரண்டு விருப்பப் பிரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், 1999ம் ஆண்டுக்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே, இதில் கலந்துகொள்ள வேண்டுமோ என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் கூறியதாவது: பதிவுசெய்த தேதி குறிப்பிடும் கட்டத்தில், 19 என தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டது. 2000க்கு பின் பதிவு செய்தவர்கள் அதை, 20 என திருத்திக் கொள்ளலாம். இதற்காக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக