தேர்வு எழுதிய எல்லா மாணவர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிட் அடிக்க பள்ளி நிர்வாகமே உதவியுள்ளது. பொதுத் தேர்வு முறையையே கேலிக்கூத்தாக்கிய திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிலேயே, இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை, வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கல்வித் துறை அதிர்ச்சி: திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடு நடப்பதை, நேற்று முன்தினம், கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, கையும் களவுமாக பிடித்தார். வேலியே பயிரை மேய்ந்தது போல், தலைமை ஆசிரியர்களும், கல்வித் துறை அலுவலகத்தில் பணிபுரிபவர்களுமே, தங்களது பிள்ளைகளுக்காக, இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது, கல்வித் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல்களை வழங்க இருந்த நிலையில், அவை அனைத்தையும், கலெக்டர் பறிமுதல் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, ஏழு ஆசிரியர்கள் உடனடியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில், தேர்வுப் பணிகளை கண்காணிக்க, வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு, தேர்வுத் துறை இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளியில் முறைகேடு நடந்திருப்பதும், இதற்கு பள்ளி நிர்வாகமும் துணை போயிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.கண்டிப்பாக... இது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரம் கூறியதாவது: தேர்வுத் துறையின் பரிந்துரை, இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், பள்ளியில் நடந்த முழு விவரங்களும், எங்களுக்கு தெரிய வந்துள்ளது. தேர்வுத் துறை இயக்குனரின் பரிந்துரை அடிப்படையில், மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை கண்டிப்பாக ரத்து செய்வோம். வழக்கமாக, அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என கூறுவோம். ஆனால், மாணவர்களின் நலன் கருதி, அங்கீகாரத்தை ரத்து செய்வதில்லை. இந்த முறை அப்படி கிடையாது. கண்டிப்பாக, தி.மலை பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம். இந்த சம்பவம், கல்வித் துறைக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களை மாற்ற ஆலோசனை: பள்ளியில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பாதிக்காமல் இருக்க, வரும் கல்வியாண்டிலேயே, இவர்கள் அனைவரையும், நகரில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்வது குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகமும், பள்ளிக் கல்வித் துறையும் ஆலோசித்து வருகிறது.
சென்னை வரும் விடைத்தாள்கள்: திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிட் அடிக்க பள்ளி நிர்வாகமே உதவியது குறித்து , தேர்வுத் துறை இயக்குனரகம் கூறியதாவது: ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடைத்தாள் நகல்களை கலெக்டர் கண்டுபிடித்து, பறிமுதல் செய்துள்ளார். அந்த விடைத்தாள் நகல்களை, மாணவர்கள் பயன்படுத்தவில்லை என்பது, விசாரணையில்தெரியவந்துள்ளது. மேலும், இந்த பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ஏற்கனவே நிர்ணயித்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல், சென்னைக்கு கொண்டுவரப்படும். புதிய ஆசிரியர்கள் குழுவைக் கொண்டு, இந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். இவ்வாறு, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக