சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள், 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் செப்., 5ம் தேதி, டில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலும், தேசிய அளவிலும், விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2012க்கான தேசிய விருது, வரும், செப்., 5ம் தேதி, டில்லியில் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழகத்தில் இருந்து, 22 சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான இறுதி கட்டப்பணி, டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று நடந்தது.
இதில், தேர்வுக் குழுவின் சிறப்பு உறுப்பினராக, மைசூர் மண்டல கல்வி நிறுவன பேராசிரியர் ரமா மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், மத்திய இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மெட்ரிக் கல்வி இயக்குனர் வசுந்தரா, சென்னை மாநகராட்சி பள்ளிகள் இணை கமிஷனர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் குறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கூறியதாவது: ஏற்கனவே, விண்ணப்பங்களை பெற்று, தகுதியான ஆசிரியர்களின் பெயர் பட்டியலை இறுதி செய்து விட்டோம். இந்த பட்டியலை, பிற மாநில உறுப்பினர் பார்வையிட்டு, ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதற்காக, இந்த கூட்டம் நடந்தது.
தகுதி வாய்ந்த, 22 ஆசிரியர்களின் பட்டியல், கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு, செப்., 5ல், டில்லியில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, தேசிய ஆசிரியர் விருதை வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான விருதுக்கு, 350 பேர், தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தப் பணி, விரைவில் துவங்கி, ஆகஸ்ட்டில் முடிவடையும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.