பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/17/2013

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் புதிய மாற்றங்களால் மாநில மொழிகளுக்கு பாதகம்"

சென்னை: "மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தின் புதிய விதிமுறைகளால், மாநில மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுபவர்கள், மிகவும் பாதிக்கப்படுவர்" என, சிவில் சர்வீஸ் பயிற்சி மைய இயக்குனர் ரவீந்திரன் கூறியுள்ளார்.
 

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளில், பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, எண்ணற்ற பயிற்சி மையங்கள், டில்லியில் உள்ளன. அவற்றில், டில்லி கரோல்பாக் பகுதியில் அமைந்துள்ள, வாஜிராம் ரவி பயிற்சி மையம், குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.
இந்த மையத்தின் இயக்குனராக உள்ள ரவீந்திரன், நேற்று டில்லியில், நிருபர்களிடம் கூறியதாவது: யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம், தன் தேர்வு நடைமுறைகளில், சில மாற்றங்களை, அண்மையில் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களால், கிராமப்புற மாணவர்கள், பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, ஆங்கில மொழியில் தேர்ச்சி இல்லாதவர்களும், மாநில மொழியில் தேர்வு எழுத விரும்புவர்களும், இந்த மாற்றங்களால் திணறும் நிலை ஏற்படும். ஆங்கில புலமை உள்ளவர்களுக்கு சாதகமாகவே, இனி சிவில் சர்வீஸ் தேர்வுகள் இருக்கும் என்ற நிலை, உருவாகப் போகிறது.
இந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என, பல மாநில மொழிகள் உள்ளன. சிவில் சர்வீஸ் தேர்வை பொறுத்தவரை, மொத்தம், ஏழு பேப்பர்கள் உள்ளன. இந்த மொழிகளில் தேர்வு எழுதுபவர்கள், இனி மேல் குறைந்தபட்சம், 25 பேராவது, இருந்தாக வேண்டும். அப்போது தான், அந்த மொழியில் தேர்வு எழுத, அனுமதியே கிடைக்கும்.
உதாரணத்திற்கு, தமிழில் தேர்வு எழுத வேண்டுமெனில், குறைந்தபட்சம், 25 பேராவது, விருப்பம் தெரிவித்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, தமிழில் தேர்வு எழுதுவதற்கு, மத்திய தேர்வாணயம் அனுமதியை வழங்கும்.
இதில் வேடிக்கை என்னவெனில், அவ்வாறு தமிழில் எழுதுவதற்கு, எத்தனை பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறித்த எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் தான் தெரியும். தேர்வு நடக்க இருப்பதோ, அக்டோபர் மாதம். 25 பேர் வரை விருப்பம் தெரிவிக்கவில்லை எனில், தமிழில் தேர்வே நடக்காது.
தமிழில் தேர்வு எழுதலாம் என விரும்பி, அதற்காக மாதக்கணக்கில் படித்துக் கொண்டிருந்த மணவனுக்கு, திடீர் என, தமிழில் எழுத அனுமதி இல்லை என்பது தெரிய வந்தால், அவர் நிலைமை பரிதாபமாகி விடும். தமிழில் தேர்வெழுத முடியுமா, முடியாதா என்பதையே, இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான், ஒரு மாணவனால் தெரிந்து கொள்ளவே முடியும். இது ஏற்கத்தக்கதல்ல.
தவிர, தமிழ் மீடியத்தில் படித்து பட்டம் பெற்றுள்ளவராக இருந்தால் மட்டுமே, தமிழில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முடியும் என்றும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆங்கில மீடியத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள், ஆங்கிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்றும், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதே வேளை, வடமாநிலங்களைச் சேர்ந்த ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்களாக இருந்தால், அவர்கள், இந்தியிலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போதுள்ள விருப்ப பாடங்களில் இருக்கும், ஏழு பேப்பர்களில், "லிட்டரேச்சர்" என்றழைக்கப்படும், இலக்கியமும் ஒரு பாடமாக உள்ளது.
இதை தேர்வு செய்ய விரும்பும் மாணவன், அந்த மொழியின் இலக்கியப் பாடத்தில் தான், பட்டம் வாங்கியிருக்க வேண்டும் என்று, மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தமிழ் இலக்கியத்தில் படித்து, பட்டம் பெற்று இருந்தால் மட்டுமே, இனி மேல், தமிழ் இலக்கியப் பாடத்தை, விருப்பப் பாடமாக எடுக்க முடியும். மற்ற பாடங்களில் படித்து பட்டம் பெற்றவர்கள், இனி, தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக கொள்ள முடியாது.
தேர்வு எழுதும், அனைத்து மாணவர்களுக்குமே, இனிமேல், ஆங்கில வாசிப்பு, விரிவுரை, சுருக்கி எழுதுதல் என, அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இவை அனைத்துக்கும் சேர்த்து, 100 மதிப்பெண்கள் என, கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம், ஆங்கிலத்தில் பட்டம் பெற்று இருந்தாலும் கூட, தமிழில் கட்டுரை எழுதலாம். ஆனால், இனிமேல் தமிழில் படித்து பட்டம் பெற்று இருந்தால் தான், தமிழில் கட்டுரை எழுத முடியும். இந்த கட்டாயம், இந்தி மாணவர்களுக்கு கிடையாது.
சமீபகாலமாக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், இந்த புதிய மாற்றங்களால், அது குறையும் என்ற அபாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக