தொலை நிலைக் கல்வி மற்றும் திறந்த வெளிக் கல்வி முறைகளில் பெற்ற எம்.பில்., பிஎச்.டி. பட்டங்கள் வேலைவாய்ப்பு பெற தகுதியில்லாதவை என்ற தமிழக அரசின் அரசாணை சரியே என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் திருநகரைச் சேர்ந்த பேராசிரியர் ஐ.இளங்கோவன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
3.4.2009 அன்று தமிழக அரசின் உயர் கல்வித் துறை சார்பில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இனி எம்.பில்., மற்றும் பிஎச்.டி. படிப்புகளை அஞ்சல் வழிக் கல்வி முறையில் நடத்தக் கூடாது. அவ்வாறு தொலை நிலைக் கல்வி மற்றும் திறந்த வெளிக் கல்வி முறைகளில் பெறப்பட்ட எம்.பில்., மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் இனி அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி விரிவுரையாளர் பணி நியமனங்களுக்கு தகுதியுடையவை அல்ல என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டின் அரசாணைப்படி அஞ்சல் வழிக் கல்வி முறையில் பெற்ற எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் இந்தப் பணி நியமனத்துக்கு செல்லாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணை காரணமாக ஏராளமானோரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த அரசாணையை செல்லாது என்று கூறி நீதிமன்றம் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர்.பானுமதி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர்.
கல்வித் துறை நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், உயர் கல்வியின் தரத்தை பராமரிக்கும் நோக்கில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட இயலாது. யு.ஜி.சி. உள்ளிட்ட அமைப்புகளின் விதிமுறைகளுக்கு முரணாக அரசாணையில் எதுவும் இல்லை. ஆகவே, அரசாணையை ரத்து செய்ய இயலாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக