சிவகங்கை:கல்வித்துறையில் இயக்குனர் பதவிக்கு
ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலுள்ள அதிகாரிகளை நியமிக்காததால், இத்துறையில் தொடர்ந்து
பல்வேறு குளறுபடி நடப்பதாக, கல்வித்துறை பணியாளர்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.
அரசின் அனைத்து
துறைகளிலும்,செயலர் பதவியில் ஐ.ஏ.எஸ்.,அந்தஸ்து உள்ள அதிகாரிகள்
உள்ளனர்.இதே போன்று மற்ற துறை இயக்குனர், தலைவர் பதவியிலும் பெரும்பாலும்
ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளே இடம் பெறுகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் மட்டும்,
முதுகலையுடன் பி.எட், எம்.எட்., படித்த ஆசிரியர்கள்,நேரடி தேர்வு மூலமும்
இயக்குனர் பதவி நிரப்பப்படுகிறது.
துறை ரீதியான
விஷயங்கள் தெரியும் என்ற நோக்கில் நியமிக்கப்பட்டாலும், இவர்களுக்கு கீழ்
பணிபுரிவோரை ஒழுங்குபடுத்த முடியாத நிலை உள்ளது. இதுவே,கல்வித்துறையில் சில
தவறுகள், குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாகிறது. அரசியல்வாதிகளை அனுசரித்து
போகவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இதனால், இத்துறையில் தவறு
அதிகரிக்கிறது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி
எனில்,முறைகேடு, தவறுகளுக்கு இடமளிக்க மாட்டார். சமீபத்தில்
கல்வித்துறையில், வாட்ச்மேன், துப்புரவு ஊழியர், அலுவலக உதவியாளர் பணிக்கு 2
ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். உயர் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே முறைகேடு
நடந்திருப்பது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இது
போன்ற தவறுகளை தடுக்க, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவிக்கு
ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் நியமன அவசியத்தை வலியுறுத்தி, கல்வித்துறை பணியாளர்கள்
தொடர்ந்து குரல் கொடுத்தாலும், அரசு நடைமுறைப்படுத்த தயங்குவது ஏன்? என்ற
கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக நடக்கும் சில குளறுபடி, தவறுகளை கருத்தில்
கொண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான இயக்குனர்களை
நியமிக்க நடவடிக்கை தேவை என்ற, கோரிக்கை பல்வேறு தரப்பிலும் வலுக்கிறது.
கல்வித்துறையினர்
கூறியதாவது: துவக்கத்தில் துறை சார்ந்தவர்களே இயக்குனர்களாக இருந்தால்
எளிமையாக இருக்கும் என்ற கருத்து இருந்தது. இத்துறையில் தற்போது
அதிகரிக்கும் தவறுகளை தடுக்க, ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளை நியமிக்கும் கோரிக்கையை
தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனாலும்,அரசு கண்டு கொள்ளவில்லை.இதே துறையில்
டி.ஆர்.பி.,போன்ற ஒருசில பிரிவிற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்
இருக்கும் போது, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிக்கு ஏன் பாரபட்சம்.
தவறுகளை தடுக்கவும், அரசியல்வாதி, அமைச்சர்களுக்கு துறை உயர் அதிகாரிகள்
விலைபோகாமல் இருக்கவும் இத்துறையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இயக்குனர்களாக
நியமிப்பது அவசியம்,'' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக