"பள்ளிகளில் மொபைல் போன்
பயன்படுத்தக்கூடாது; அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைத்து பெறப்படும்
புகார்களை ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும்" என, கலெக்டர் கோவிந்தராஜ்
உத்தரவிட்டார்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் பேசியதாவது:
"மாணவி, மாணவியர் எதிர்காலத்தை
அமைத்துக் கொள்ளும் வகையில் கல்வியையும், ஒழுக்கத்தையும், நற்குணங்களையும்
கற்கும் வாய்ப்பு பள்ளி பருவத்தில் கிடைக்கிறது. அவர்களுக்கு தேவையான
அறிவுரையை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். நாட்டின் எதிர்கால தூண்களாகிய
மாணவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய
கடமை.
அறிவியல் வளர்ச்சி காரணமாக, தகவல்
பரிமாற்றம் எளிதாகியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆக்கங்களுக்கும்,
அறிவு வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறான தகவல்களை
அறிவதற்கும், முறையற்ற செயல்களுக்கும் பயன்படுத்தக் கூடாது. பள்ளி மாணவ,
மாணவியர் மொபைல்போன் பயன்படுத்தக்கூடாது. பெற்றோர்களும் தங்கள்
பிள்ளைகளுக்கு மொபைல்போன் கொடுத்து பள்ளிக்கு அனுப்பக்கூடாது.
அரசு பள்ளிகளில், புகார் பெட்டி
வைத்து வாரம் ஒருமுறை புகார் கடிதங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள்
தலைமையில் ஆசிரியர்கள் கூடி விவாதிக்க வேண்டும். கடிதங்களை பதிவேடுகளில்
பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்க
பிரதிநிதிகள், மாணவ, மாணவியர் அடங்கிய குறைகேட்பு குழு ஒழுங்கு நடவடிக்கை
குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
மாணவ, மாணவியர் பற்றிய புகார்களை
இக்குழுவினர் கண்காணித்து ஆய்வு நடத்த வேண்டும். இடைவேளை நேரத்திலும்,
மாணவ, மாணவியரை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும். நீண்ட நாட்கள்
பள்ளிக்கு வராத மாணவ, மாணவியர் குறித்து, அவர்களது பெற்றோருக்கு தகவல்
கொடுக்க வேண்டும்.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி
ஆசிரியர்களின் நடவடிக்கைக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தகவல் அடிப்படையில், பெற்றோரும், தங்களது குழந்தைகளை
கண்காணித்து வளர்க்க வேண்டும். மாணவர்களின் வளர்ச்சிக்காக, ஆசிரியர்கள்
தூண்டுகோலாக இருக்க வேண்டும்." இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக