ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளி தலைமையாசிரியர், மாணவ, மாணவியரை வெளியே விரட்டி விட்டதால் பரமத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் அருகே ஊராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 157 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி தலைமையாசிரியராக மாதேஸ்வரன், ஆசிரியராக அருள்மணி பணியாற்றுகின்றனர்.
பரமத்தி ஒன்றிய ஏ.இ.இ.ஓ., அலுவலகம், திருச்செங்கோடு சாலையில், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஏ.இ.இ.ஓ.,வாக சந்திரசேகரன் உள்ளார். ஊராட்சி துவக்கப் பள்ளியில், மூன்று வகுப்பறைகள் காலியாக உள்ளது. அதனால், ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தை, இப்பள்ளியில் உள்ள காலி இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த பள்ளி தலைமையாசிரியர் மாதேஸ்வரன், பி.டி.ஏ., கூட்டத்தை கூட்டி ஏ.இ.இ.ஓ., அலுவலகம், இப்பள்ளிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். இருந்தும் இங்கு மாற்றுவதற்கு, ஏ.இ.இ.ஓ., சந்திரசேகரன் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர்களை மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்ட தலைமையாசிரியர், நாளை (நேற்று) பள்ளி இயங்காது என தெரிவித்தார்.
அதையும் மீறி, நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியரை தடுத்து நிறுத்தி, "பள்ளியில் பிரச்னையாக இருக்கிறது; உள்ளே செல்கிறாயா, வெளியே செல்கிறாயா" எனக் கேட்டு வெளியே விரட்டினார். அதனால், மாணவ, மாணவியர், வகுப்புக்கு செல்ல முடியவில்லை.
தகவலறிந்த ஏ.இ.இ.ஓ., சந்திரசேகரன் பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் மாதேஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால், மார்ச், 27ம் தேதி உயர் அதிகாரிகளை வைத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காணுவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஏ.இ.இ.ஓ., சந்திரசேகர் கூறியதாவது: இப்பள்ளியில், தலைமையாசிரியர் மாதேஸ்வரன், ஆசிரியர் அருள்மணி ஆகியோருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இருவரும் மோதல் போக்கை கைவிட்டு மாணவர் கல்வித்தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கிராமக் கல்விக்குழு தலைவர் நாச்சிமுத்து கூறுகையில், "மோதல் போக்கை கொண்டுள்ள ஆசிரியர் இருவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் மாணவரின் கல்வித்தரம் மேம்படும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக