தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியை, தலைமை ஆசிரியர், இளைஞர் காவல்படை
வீரர் ஆகியோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்
என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
பிரவீண்குமார் சனிக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடுகள் நடந்து
வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 42 மையங்களில் பலத்த
பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன.
மே 16-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால்
ஓட்டுகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான
வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30-க்கு தொடங்கும். வாக்கு எண்ணும் பணியில்
சுமார் 16 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
நிவாரணம் 2 மடங்கு
தேர்தல் பணியின்போது உயிரிழந்த அரக்கோணம் ஆசிரியை பூங்கொடி, சேலம்
எடப்பாடி தலைமை ஆசிரியர் தங்கராசு, கிருஷ்ணகிரி மாவட்டம் வீரணகுப்பத்தைச்
சேர்ந்த இளைஞர் காவல்படை வீரர் வினோத்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.10
லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கடந்த தேர்தலின்போது இந்த நிவாரணத் தொகை
ரூ.5 லட்சமாக இருந்தது.
அனைத்து தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு
எண்ணிக்கை முடிந்து 6 மாதங்கள்வரை பத்திரமாக வைக்கப்படும். அதற்குள்
தேர்தல் வெற்றியை எதிர்த்து நீதிமன்ற வழக்கு எதுவும் தாக்கல்
செய்யப்படவில்லையென்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள
பதிவுகள் அழிக்கப்பட்டு, வேறு தேர்தலுக்கு அந்த இயந்திரங்கள்
பயன்படுத்தப்படும்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள்
தங்களது தேர்தல் செலவுக் கணக்கை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய
வேண்டும். இல்லாவிட்டால், 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத
அளவுக்கு ஏன் உங்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு
நோட்டீஸ் அளிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக