மதுரை: மதுரை மாவட்டத்தில், பள்ளிகளின் சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில், இந்தாண்டு 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 500 அரசு மற்றும் உதவிபெறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகின்றன. பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுவது, தோட்டம் அமைத்து, பள்ளி வளாகத்தில் பசுமை சூழலை ஏற்படுத்துவதும், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இம்மன்றங்களின் நோக்கம்.
இதற்காக, மன்றங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.2,500 பராமரிப்பு தொகை அரசு வழங்குகிறது. இவற்றின் மூலம் இந்தாண்டு பள்ளிகளில், 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஜூ-ன் முதல் ஆக., வரை ஒரு லட்சம் கன்றுகள் நடுவதற்கும் ஆயத்த பணிகள் நடக்கின்றன. எந்தெந்த பள்ளிகளுக்கு எத்தனை கன்றுகள் தேவை என்ற கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி கூறியதாவது: இம்மன்றங்கள் மூலம் கடந்தாண்டு ஒன்றரை லட்சம் கன்றுகள் பள்ளிகளில் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 3 லட்சம் கன்றுகள் வரை நட திட்டமிட்டுள்ளோம்.
பள்ளி வளாகத்தில் மாணவர்களே பராமரிக்கும் தோட்டங்கள் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பராமரிப்பிற்காக பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி, முறையாக செலவிடப்படுகிறதா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக