10/29/2014
தமிழகத்தில் 158 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!
லேபிள்கள்:
Educational News
தமிழகத்தில் உள்ள 158 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு திட்டக்குழுவின் அனுமதி மறுக்கப்பட்டுள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு, 2011-2012 ஆம் கல்வியாண்டில் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என விதி எண் 110 ன் கீழ் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, டிசம்பர் 2011 ல் தரம் உயர்த்தப்பட்ட 710 பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டார்.
அவற்றில் 552 பள்ளிகள் மட்டுமே மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளது. மற்ற 158 பள்ளிகள் அந்த விதிமுறைகளை மட்டும் மட்டுமல்லாமல், மாநில அரசின் சார்பில் தரம் உயர்த்துவதற்கான 1 லட்சம் பொது மக்கள் நிதி அளிக்கும் விதியையும் கூட பூர்த்தி செய்யவில்லை.
கடந்த திமுக ஆட்சியின்போது 2009-10 ம் கல்வியாண்டில் 200 பள்ளிகளும், 2010 -11 ம் ஆண்டில் 344 பள்ளிகளும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் அனுமதியுடன் உயர்நிலைப்பள்ளிகளாக துவக்கப்பட்டன. அவற்றில் 200 பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் பள்ளி ஒன்றுக்கு தலா 58 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் துவக்கப்பட்டன. பெற்றோர் சங்கங்களின் தலைவர் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களால் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதுவரை 170 பள்ளிகளின் கட்டுமானப்பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. 30 பள்ளிகளின் கட்டுமானப்பணிகள் நிறைவடையாமல் உள்ளது.
இது மட்டுமின்றி 344 பள்ளிகளின் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு 300 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. ஆனால் பழைய கட்டுமான பணிகளுக்கான விலையிலேயே கட்ட வேண்டும் என கூறியுள்ளது. இதனால் மாநில அரசின் நிதியுதவியை பெற்று கட்டுமானப்பணிகளையும் துவக்க முடியாமல் இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை.
கணிசமான எண்ணிக்கையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளதை அறிந்த அரசியல்வாதிகள் தங்கள் பகுதியில் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என மட்டுமே அமைச்சரிடம் கோரிக்கை வைத்து பெற்று சென்றுள்ளனர். அதன் பிறகு அந்தப் பள்ளிக்கான இடத்தை தேர்வு செய்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு அளிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளின் முயற்சியால் இதுவரை 160 முதல் 170 பள்ளிகளுக்கு மட்டுமே தேவையான இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் 2011 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு அமைந்த பின்னர் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா 2011-12 ம் கல்வியாண்டில் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் தங்களின் தொகுதியில் உள்ள பள்ளிகளின் பெயர் இடம் பெற்று, தரம் உயர்த்துவதில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் குறியாக இருந்தனர். பள்ளியை தரம் உயர்த்த தேவையான அனைத்து விதிமுறைகளும் சரியாக நிறைவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. பள்ளிகளுக்கான இடத்தை தேர்வு செய்து அளிப்பதிலும் கவனம் செலுத்தவில்லை.
பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான மத்திய அரசின் விதிமுறைகளை மீறி, 158 பள்ளிகளை தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.
இருப்பினும் கடந்த மே மாதம் நடைபெற்ற மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அனுமதி அளிக்கும் கூட்டத்தில், மொத்த மாநிலங்களில் 1096 புதிய பள்ளிகளில் கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் உள்ளதனால், இந்தாண்டு புதிதாக கட்டுமானப்பணிகளுக்கான நிதி ஒதுக்க முடியாது என தெரிவித்து இந்த 158 பள்ளிகளின் தரம் உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக