காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு ஆசிரியர்கள், ஆய்வகம், வகுப்பறை, மேஜை, நாற்காலி போன்ற எந்த வசதியையும் மாவட்ட கல்வித் துறை ஏற்படுத்தவில்லை.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு ஆசிரியர்கள், ஆய்வகம், வகுப்பறை, மேஜை, நாற்காலி போன்ற எந்த வசதியையும் மாவட்ட கல்வித் துறை ஏற்படுத்தவில்லை.
இந்த பள்ளிகளுக்கு மாணவர்களை பிடித்து தள்ளும் வேலையை அதிகாரிகள் துவக்கி உள்ளனர். மாநிலம் முழுவதும் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் 24ம் தேதி பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டது.
தரம் உயர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடப்பாக்கம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, பெருங்குடி உயர்நிலைப் பள்ளி, திருவஞ்சேரி உயர்நிலைப் பள்ளி, கொளப்பாக்கம் உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு அறிஞர் அண்ணா ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, செம்மஞ்சேரி உயர்நிலைப் பள்ளி ஆகிய ஆறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த பள்ளிகளுக்கு அருகில், மேல்நிலைக் கல்வி படித்துவரும் மாணவர்களை, இந்த பள்ளிகளுக்கு மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை, மாவட்ட கல்வித் துறை செய்து வருகிறது. அதாவது, இந்த பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களை, பிளஸ் 2 வகுப்பில் மீண்டும் சேர்க்க, மாவட்ட கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட கல்வி அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர். தற்போது, பிளஸ் 1 பயின்று வரும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்று வழங்குவதற்கு தயாராகி வருகின்றனர்.
இல்லை... இல்லை...
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில்...
* ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு இல்லை
* ஆய்வகங்கள் இல்லை
* தேவையான வகுப்பறை இல்லை
* மேஜை, இருக்கை வசதி இல்லை
* ஆய்வகங்கள் இல்லை
* தேவையான வகுப்பறை இல்லை
* மேஜை, இருக்கை வசதி இல்லை
தற்போதைய நிலவரப்படி, மேல்நிலைப் பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது, தற்போது புதிதாக தரம் உயர்த்தப்பட்ட இந்த ஆறு பள்ளிகளிலும் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, நிரப்பப்படும் என்பதும் கேள்விக்குறி. அதோடு, இந்த பாடப்பிரிவுகளுக்கு தேவையான வகுப்பறைகள், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், தாவரவியல், உயிரியல் போன்ற ஆய்வகங்களை ஏற்படுத்த வேண்டும். காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், அரையாண்டு தேர்வுக்கும், ஆண்டு இறுதித் தேர்வுக்கும் மாணவர்கள் தயாராவதில் சிக்கல் ஏற்படும்.
தனியார் பள்ளிகளுடன் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் போட்டியிட முடியாமல், அரசு பள்ளிகள் மிகவும் பின் தங்கியுள்ள இந்த காலகட்டத்தில், எந்த அடிப்படை வசதிகளும், ஆசிரியர்களும் ஆய்வகமும் இன்றி செயல்பட உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு, மாணவர்களை மாற்றுவது என்பது, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகவே அமையும்.
இந்த பள்ளிகளில், புதிதாக ஆய்வகங்கள் ஏற்படுத்த கல்வித்துறை எந்த நிதியையும் இதுவரை ஒதுக்கவில்லை. பின்னர் ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டிற்கு அருகில் பள்ளி இருக்கிறது என்று ஆசை வார்த்தை கூறி, அடிப்படை வசதி ஏற்படுத்தப்படாத அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியரை சேர்க்க பெற்றோருக்கு வலை விரிக்கும் வேலையை மாவட்ட கல்வி அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
ஒரு வாரத்திற்குள் மாணவர்களை புதிய பள்ளியில் சேர்க்க மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. உண்மை நிலவரத்தை அறியாமல், இந்த பள்ளிகளில் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க வேண்டுமா? என மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர், ஏற்கனவே படித்து வரும் பள்ளியிலேயே மேல்நிலைக் கல்வியை தொடர வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது.
இருண்ட காலத்தில்...
இதுகுறித்து, கல்வியாளர்களிடம் கேட்டபோது, "பள்ளிகள் தரம் உயர்த்துவது குறித்த அறிவிப்பை ஆண்டு இறுதியில் வெளியிட்டு, அடுத்த கல்வி ஆண்டு துவக்குவதற்கு முன்பு, அந்த பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த பிறகுதான், மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, இப்படி மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவது, அவர்களின் மொத்த வாழ்க்கையையும் இருண்ட காலத்தில் தள்ளிவிடும்" என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக