பெண் அரசு ஊழியர்களை விடுமுறை தினத்தில் அலுவலகம் வர கட்டாயப்படுத்தக் கூடாது
பெண் அரசு ஊழியர்களை விடுமுறை தினத்தில் அலுவலகம் வர கட்டாயப்படுத்தக் கூடாது என சிவகங்கையில் நடந்த மகளிர் தின கருத்தரங்கில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மகளிர் தின கருத்தரங்கு நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ஜீவரெத்தினம் தலைமை வகித்தார். துணைச் செயலர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர் இளநங்கை வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மலர்விழி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் நீலா, தமிழ்த்துறை பேராசிரியர் மனோன்மணி ஆகியோர் பேசினர்.
இதில் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பணி புரியும் பெண்களை விடுமுறை தினத்தில் அலுவலகம் வர கட்டாயப்படுத்தக் கூடாது. பெண்கள், மாணவிகள் சென்று வரும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் மகளிர் சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெண்களுக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பெண்கள் பணி புரியும் இடங்களில் குறை கேட்பு மையம், போதிய கழிப்பறை வசதிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார துணைச் செயலர் மாலா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக