4/29/2018
ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? மே-8 ஜாக்டோ ஜியோ சென்னை முற்றுகை
லேபிள்கள்:
அறைகூவல்
இனிய தோழமையே
பல்வேறு போராட்டங்களில் பல வடிவங்களில் பங்குபெற்று பழக்கப்பட்ட உனக்கு மே 8 சென்னை முற்றுகைக்கு வா என அழைப்பு விடுப்பது என்பது தேவயைற்றது என்றே கருதுகிறேன். கிட்டதட்ட 16க்கும் மேற்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுதத்தில் கலந்துகொண்டு இந்த தேச முன்னேற்றத்திற்காக உன் ஊதியத்தை இழந்தவன் நீ. பொது கோரிக்கைக்கே போர் முரசு கொட்டும் நீ, உன் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க போகும் 4 அம்ச கோரிக்கைகாக ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரையுள்ள ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஜேக்டோ ஜியோ என்ற பதாகைக்கு கீழ் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒழிக்கின்ற மகா சமுதரத்தில் நீயும் சங்கமிப்பாய் என்று எனக்கு நன்கு தெரியும்.
அதோடு மட்டும் உன் கடமை முடிந்துவிடவில்லை என்பதை நீ அறிவாய். உன் சக ஆசிரியர் தோழனையும் மே 8 என்ற வரலாற்று சிறப்புமிக்க முற்றுகை போரில் பங்கெடுக்க வைக்க வேண்டிய தலையாய கடமை உனக்குண்டு. போராட்டத்தை நசுக்க நம்மிடமே உள்ள சில நச்சு பாம்புகள் பல்வேறு விஷம கருத்துக்களை உமிழ முயற்சிக்கும் என்பதை கடந்தகால போராட்டங்களில் நீ நன்கு உணர்ந்திருப்பாய். இங்கு போராடாமல் யாராட்டமும் செல்லாது என்ற பால பாடத்தை நீ படித்து வளர்ந்தவன் என்பதால் உனக்கு விரிவாக சொல்ல தேவையில்லை. ஆனால் களப் போராட்டம் என்பது பல்வேறு சிந்தைனயுள்ள இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய சூழல் இன்று ஜாக்டோ ஜியோவினால் ஏற்பட்டுள்ளது. எனவே களத்தை சூடு படுத்த வேண்டும். அனைவரையும் களப்போராளியாக மாற்ற வேண்டும். நம் உரிமையை மீட்டெடுக்க கடைசி வாய்ப்பு என்பதை உணரச் செய்யவேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் அடுத்தடுத்த ஊதியக்குழுவின் பரிந்துரையை எதிர்நோக்கியுள்ளபொழுது நாம் கடந்த ஊதியக்குழுவின் துரோகத்திற்கு கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் பெற முடியாமல் போனதற்கு கடந்தகாலத்தில் நம்மிடம் ஒற்றுமையின்மைதான் என்பதை உணர்த்துங்கள். அதிகார வர்க்கங்கள் ஆண்டு வாரியாக திட்டமிட்டு நம்மை பிரிக்க செய்தி சூழ்ச்சியில் சில சக ஆசிரியர் சகோதரர்கள் பலிகடாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் உண்மையை கூறி உணர்வுடன் களத்திற்கு அழைத்து வரவேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நம்முடைய பலத்தை இந்த அரசுக்கு உணர்த்தியாச்சு.
அப்படியிருந்தும் மௌனம் காக்கும் அரசின் மௌனம் கலைக்க கடைசி வாய்ப்பு மே-8 அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை என்ற அதிரடிச் செய்தியகத்தான் இருக்கும். கோட்டையின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன எனவும், தமிழக அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றது என்ற செய்தியும் ஊடகங்டகள் வழியாக உனக்கு வந்தடையும் என்பதை பலமாக நம்பு. ஜாக்டோ ஜியோவில் இல்லாத ஆசிரியர் நண்பர்களையும் சென்னைக்கு அழைக்க தவறாதே. ஜக்டோ ஜியோவின் மண்டல ஆயத்த கூட்டங்கள் நிறைவடைந்த நிலையில் வட்டார கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறாய் என்ற செய்தி மகிழ்வுதான். நடத்தாத வட்டாரங்களில் பொறுப்பாக்கப்பட்ட இயக்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு நடத்த திட்டமிடு. கோடை விடுமுறையை நமக்கு சாதகமாக பயன்படுத்து. வேன் மூலம் பிரச்சாரம் நளை நம் மாவட்டத்தில் தொடங்க இருக்கு. வாய்ப்புள்ள இடங்களில் நீயும் பங்கெடு. விடைத்தாள் திருத்தும் மையங்களில் நாளை மேற்கொள்ளவிருக்கும் பிரச்சாரம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சென்னைக்கு நிச்சயம் இழுக்கும். இது உனக்கு கடுமையான காலம் என்பதை நான் அறிவேன். பேருந்து முன் பதிவுகளை உறுதியாக்கு. தோழனே உறக்கமின்றி செயலாற்று.
இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி எவ்வாறு அரங்கேறியுள்ளது? இதோ கவிஞர் சிற்பியின் கவிதை:
சர்ப்பயாகம்
பரம பதத்துச்சோபான படம் எங்கள் தேசம் அதில்
கட்டங்கள்தோறும் நச்சுப்பாம்புகள் காத்துக்கிடக்கின்றன.
ஆதிசேஷன் கார்க்கோடகன் கண்ணாடிவிரியன்
கொம்பேறிமூர்க்கன் படங்கள் விரித்து
உடல்கள் நெளித்து காத்துக்கிடக்கின்றன.
தாயங்கள் போட்டு நாங்கள் தொடங்கும்
ஒவ்வொருபயணத்தையும்
தடுத்துக் கடிக்க அடுத்துக் கெடுக்க
இத்தனை நாகங்களா?
புறப்பட்ட திசைக்கேவிரட்டியடிக்கும்
இருட்டுத் தாரைகளே!பரமபதத்தின்
தடத்தை மறைக்கும் திருட்டுச் சாரைகளே!
வழிவிடச் சொல்லிவிரல்கள் நடுங்கத் தாயம் உருட்டுகிறோம்..
உங்கள் வாயில்விழுந்து வாலில்வழிந்து 'நேற்றை'ப் புரட்டுகிறோம்!
எங்கோ சிலசில ஏணிகள்-அவற்றில்ஏறி நிமிர்ந்தவுடன்
சீறிய உங்கள் விஷ நாக்குகளின் ஈரத்தில் வழுக்குகிறோம்.!
அனைத்தையும் முறியடிப்போம்
வெற்றி நமதே...
தொடர்ந்து உன்னோடு வருவேன்...
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்டம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)