புது தில்லி, மே 29: அதிக கட்டணம் வசூலிப்பது, மாணவர்களின் வீட்டுக்கு டீ.சி.யை தபாலில் அனுப்புவது போன்ற அராஜகத்தில் ஈடுபடும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தனியார் பள்ளிகளில் மிக அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிப்பது இப்போது நாடு முழுவதும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்து விட்டு கட்டணம் செலுத்த பெற்றோர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள். இது தவிர பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் சரியான ஊதியம் தருவதில்லை. இந்தப் பிரச்னையை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது.தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நியாயமற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது தனியார் பள்ளிகள் விஷயத்திலும் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் தில்லியில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் இந்த சட்டம் குறித்து விவாதிக்கப்படுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது."பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி அமைப்புகளில் நியாயமற்ற நடவடிக்கைகள் தடை மசோதா 2011' என்ற பெயரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இதன்படி தனியார் பள்ளிகள், மாணவர்கள் சேர்க்கையின் போது அளிக்கும் விளக்கக் குறிப்பிலேயே தங்கள் பள்ளியைப் பற்றிய முழு விவரம், பாடங்கள், பாடத்திட்டங்கள், பள்ளி விதிமுறைகள் என மாணவர்களின் பெற்றோருக்கு அனைத்து விதமான தகவல்களையும் அளிக்க வேண்டும். பள்ளியின் இணையதளத்திலும் இந்த விவரங்களை வெளியிட வேண்டும். உரிய ரசீது தராமல் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை இந்த மசோதா முழுமையாகத் தடை செய்யும். விளம்பரங்கள் மூலம் பள்ளி பற்றி மிகையாக பிரசாரம் செய்வது, போதுமான திறமையற்ற ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்துவது போன்றவற்றையும் இந்த மசோதா தடை செய்கிறது.விதிகளை மீறும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கவும், தேவைப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் முடியும். தனியார் பள்ளிகள் அதிக அளவில் நன்கொடை வசூலிக்கின்றன. கட்டணம் என்ற பெயரில் உரிய ரசீது ஏதும் தராமல் பணம் வாங்குகின்றனர். அவர்கள் கேட்கும் கட்டணத்தை அளிக்க சிறிது தாமதமானாலும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவது, டீ.சி.யை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. மேலும் அரசுத் தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சில மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வது, அவர்களை வேறு பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோர்களிடம் வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் தனியார் பள்ளிகள் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக