சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஒன்பது பேர் கொண்ட குழுவைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழு ஜூலை 6-ம் தேதிக்குள் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்கும். நீதிமன்றத்தில் இந்த அறிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க ஒரு வாரம் ஆகும். அதன் பின்னர் அத் தீர்ப்பில் மாற்றுக் கருத்து இருப்பின், தமிழக அரசு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த விவகாரம் முடிவுக்குவர குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகலாம். இந்த நிலையில், மாணவர்களின் நலன்கருதி இந்தக் குழு, ஒரு வாரத்துக்குள் ஓர் இடைக்கால அறிக்கையை வெளியிடுவது மிகவும் இன்றியமையாதது. இந்த இடைக்கால அறிக்கையானது, நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில், குறைந்தபட்சமாக காலாண்டுத் தேர்வு வரையில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திலும் நடத்த வேண்டிய பொதுவான பாடத்திட்டம் குறித்து வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் பள்ளிகள் செயல்படுவதற்கு இந்த இடைக்கால அறிக்கை உதவியாக அமையும். ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அறிவியல், வரலாறு, கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில், சமச்சீர் கல்வித் திட்டமானாலும் சரி, பழைய பாடத்திட்டம் என்றாலும் சரி, மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய பொதுவான பகுதிகள் சில இருக்கவே செய்யும். அந்தப் பகுதிகளை மட்டுமே காலாண்டுத் தேர்வு வரை கற்பிக்கவும், அவற்றில் தேர்வு நடத்தவும் சாத்தியமே. இந்த நடவடிக்கையால், நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருக்காமல் பள்ளிகள் செயல்படுவதற்கு உதவியாக அமையும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களைப் பொறுத்தவரை இலக்கணப் பகுதியை மட்டும் காலாண்டுத் தேர்வுக்காக எடுத்துக் கொண்டு கற்பிக்கலாம். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, தமிழக அரசு மேற்கொண்ட முடிவு சரியானதுதான் என்று நீதிமன்றம் கருதினாலும் சரி அல்லது தமிழக அரசு சமச்சீர் கல்வியைப் புதிதாகச் சேர்க்கப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட பாடப்பிரிவுகளுடன் அமல்படுத்துவது என்கிற முடிவுக்கு வந்தாலும் சரி, அந்தப் புதிய பாடங்களை அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வுக்காகக் கற்பிக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு, காலாண்டுத் தேர்வுக்கான பொதுப்பாடங்களை இந்தக் குழு பரிந்துரைக்கட்டும். பள்ளிகள் தொய்வின்றி நடைபெறட்டும். தற்போது நீதிமன்ற விவகாரத்தால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால், அவர்களுக்குக் கற்பித்தல் தடையின்றி நடந்துகொண்டிருக்கிறது. ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த நீதிமன்ற விவகாரத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது, ஆகவே, எல்லா முடிவும் தெரிந்தபிறகு எதைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்வோரும் இருக்கிறார்கள். ஆனால் இப்படிச் சொல்வோர், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாடம் நடத்த முன்வருவார்களா என்றால், நிச்சயமாக மாட்டார்கள். தற்போது பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாமல், விளையாட்டு, ஆங்கிலப் பயிற்சி, மொழித்திறன், பொதுஅறிவு குறித்து கற்பிக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள் இதில் அதிக அக்கறையுடன் ஈடுபட்டாலும், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில், மாணவர்களின் போக்குக்கே விட்டுவிடும் அவலநிலை காணப்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் நிறுத்திவைக்காமல், தேர்ச்சிபெறச் செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருப்பதே காரணம். இத்தகைய மனப்போக்கு, ஏற்கெனவே கற்பித்தல் திறன் அல்லது ஆர்வம் குறைந்துகிடக்கும் அரசுப் பள்ளி வளாகங்களை மேலும் சோம்பலுக்கு உள்ளாக்கிவிடும். பிறகு இவர்களைத் தட்டி எழுப்புதல் மிகமிக கடினம். சமச்சீர் கல்வி என்று சொல்வதன் மூலம், எந்த மொழிவழியாகப் படித்தாலும் தமிழகப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவர் பெற்றிருக்கும் அறிவு, ஒரே சீரான அளவில் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால், தனியார் பள்ளிகளின் கற்பித்தலுக்கும், அரசுப் பள்ளிகளின் கற்பித்தலுக்கும் வேறுபாடு இருக்கும்போது, சமச்சீர் கல்வியால் மட்டும் அறிவு சமநிலை பெறுமா என்கிற கேள்வி எழுகிறது. அப்போது, இதுபோல பள்ளிகள் செயல்படாமல் இருக்குமானால், நிலைமை மோசமாகிவிடும். சமச்சீர் கல்வித் திட்டத்தில், திமுக அரசு நியமித்த குழு தயாரித்த பாடத்திட்டம் தரமானதாக இல்லை என்பதும், இதில் திமுக சார்பான சில கருத்துகள் இடம்பெற்றுள்ளன என்பதும்தான் தமிழக அரசின் ஆட்சேபமாக இருக்கிறது. இந்த ஆட்சேபம் நியாயமானதும்கூட. ஆட்சிபீடத்தில் இருப்பதாலேயே மாணவர்களின் கல்வியில் சில தேவையற்ற கருத்துகளைத் திணிப்பது என்பது ஃபாசிச வழிமுறைகளில் ஒன்று. அத்தகைய பகுதிகளை நீக்க வேண்டும் என்று அரசு தீர்மானிக்குமேயானால், அவற்றை நீக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துவிடலாம். சேர்க்கப்படும் புதிய பகுதிகளை இணைப்பு நூல் என்பதாக அனைத்துப் பாடநூல்களுக்கும் தனியாக வழங்கலாம். இதனால் அரசுக்குச் செலவும் குறையும். இணைப்பு நூல்களுக்கான செலவையும் குறைக்க அரசு விரும்பினால், அதற்கும் வழியுள்ளது. இந்த இணைப்பு நூல்களின் அட்டையில், மாணவர் சேமிப்பின் அவசியம் குறித்தும், கல்விக் கடன் வசதிகள் குறித்தும் வங்கிகள் தங்கள் விளம்பரங்களை அச்சிட்டுக் கொள்ளவும், நூல் அச்சடிக்கும் செலவை ஏற்கவும் செய்ய முடியும். இந்தக் குழப்பங்கள் யாவும் நீங்கி அடுத்த ஆண்டுக்கான பாட நூல்கள் அச்சிடும்போது,நீக்க வேண்டியதை நீக்கி, புதிய பாடங்களைச் சேர்த்து, புதிய பாடநூல்களை அச்சிட்டுக் கொள்ளலாம். சமச்சீர் கல்வி என்பது இன்றியமையாதது. அது அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பாடத்திட்டங்களுடன் செயல்படும் தனியார் பள்ளி மாணவர்களின் தரத்துக்கு உயர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர, தனியார் பள்ளிகளில் பாடத்திட்டத் தரத்தைக் குறைக்கும் விதத்தில் அமைந்துவிடக் கூடாது. மேலும், சமச்சீர் கல்வியின் பெயரால், பள்ளிகள் செயல்படாமல், மாணவர்களின் பொன்னான நேரம் வீணாக்கப்படுவதும் கூடாது. தமிழகத்தை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்னை இதுதான் என்பதை முதல்வரும் அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக