தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 100 மாணவ, மாணவிகளுக்கு மேல் இருந்தால் அந்த பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய, தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளிகள் மேம்பாடு, ஆசிரிர்களுக்கு பயிற்சி, மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் என்று எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை என்றாலும் தற்போது அந்த ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியினையும் எஸ்.எஸ்.ஏ மூலம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாதாரணமாக உள்ள பாடங்களுக்கு போதிய ஆசிரியர்கள் அரசு பள்ளிகள், அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், ஆதிதிராவிட நல பள்ளிகளில் இருக்கின்றனர். அதே சமயம் உடற்கல்வி, தொழிற்கல்வி போன்ற ஆசிரியர்கள் பரவலாக இல்லாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கும் இளம் பள்ளி பருவத்திலே விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் இதற்கென தனியாக ஆசிரியர்களை நியமனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது சம்பந்தமாக அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; 2011-2012ம் ஆண்டு எஸ்.எஸ்.ஏ வரைவு திட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் மத்திய, மனிதவள மேம்பாட்டு துறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசு, ஊராட்சி ஒன்றிய, நலத்துறை, நகராட்சி நடுநிலைப்பள்ளிகளை தேர்வு செய்து 6,7,8ம் வகுப்புகளில் உள்ள அந்த பள்ளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ள பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். அந்த பள்ளிகளில் இதுபோன்ற ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்படும். அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, நலத்துறை நடுநிலைப் பள்ளிகளின் விபரம் மட்டும் தெரிவிக்க வேண்டும். நடுநிலைப்பள்ளிகளில் 6,7.8 மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் கலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடல்நலம் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் பணியிடம் வழங்கி இருத்தல் கூடாது. இந்த ஆசிரியர் பணியிடம் அங்கு இருந்தால் மேற்கண்ட திட்டத்தில் அந்த பள்ளியை சேர்க்க வேண்டாம். இந்த லிஸ்டை உடனடியாக மாவட்ட வாரியாக கண்டறிந்து உடனடியாக மாநில திட்ட இயக்குநருக்கு அனுப்பி வைக்க கோரப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இது சம்பந்தமான கணக்கெடுப்பு பணியினை எஸ்.எஸ்.ஏ திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக