சென்னை, ஜூன் 30: பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 35 நாள்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வுக்கான நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.ஜூலை 1 முதல் 6 வரை தொழில் பிரிவு மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 140 வரை பெற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். முதல் நாளில் இவர்களில் மாற்றுத் திறனாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 800 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான 2-ம் கட்டக் கலந்தாய்வு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் நடத்தப்படும்.ஜூலை 7-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.2 மணி நேரத்துக்கு முன்பே: காலை 7.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பிரிவு என 8 பிரிவுகளாக இரவு 7.30 மணி வரை கலந்தாய்வு நடைபெறும். இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:மாணவர்கள் 2 மணி நேரத்துக்கு முன்பே கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்கு வந்துவிட வேண்டும். உரிய நேரத்துக்கு கலந்தாய்வுக்கு வராத மாணவர்கள், அவர்களுக்கான பிரிவில் பங்கேற்க முடியாது. அடுத்த பிரிவில்தான் பங்கேற்க முடியும்.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அழைப்பு கடிதத்துடன், தங்களுடைய அசல் சான்றிதழ்களையும் எடுத்து வரவேண்டும்.முதலில் முன் பணம்: கலந்தாய்வு வளாகத்தில் நுழையும் மாணவர்கள் முதலில், வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வங்கி கவுன்டரில் முன்தொகையான ரூ. 5 ஆயிரத்தை செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களாக இருந்தால் ரூ. 1000 செலுத்த வேண்டும்.முன் பணம் செலுத்தியவுடன் மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான படிவம் கொடுக்கப்படும். அதில் தங்களுடைய ஒட்டுமொத்த தர வரிசை எண், சம்பந்தப்பட்ட பிரிவில் அவர்கள் எடுத்துள்ள தர வரிசை எண்ணையும் குறிப்பிட வேண்டும். முன் பணம் செலுத்தியதற்கான விவரங்களையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.பின்னர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விளக்க அறைக்கு மாணவர்கள் வந்துவிட வேண்டும். இந்த விளக்க அறையில் நுழையும்போது, தங்களுடைய வருகையை மாணவர்கள் பதிய வேண்டும்.விளக்க அறையில் இரண்டு பெரிய திரைகளில், கல்லூரிகளில் அவ்வப்போது காலியாக உள்ள பொறியியல் இடங்கள் திரையிடப்படும். விளக்க அறையிலிருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் அனுப்பப்படுவர். அந்த அறையில் அமர்ந்திருக்கும் ஊழியரிடம், மாணவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை காட்டிவிட்டு, திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.ஏற்கெனவே தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து, மாற்றுச் சான்றிதழை (டிசி) அங்கு சமர்ப்பித்திருப்பவர்கள், சம்பந்தப்பட்ட கல்லூரியிலிருந்து அத்தாட்சி சான்றிதழை பெற்று வரவேண்டும். இந்த அத்தாட்சி சான்றிதழை காண்பித்து, கலந்தாய்வில் பங்கேற்று குறிப்பிட்ட கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டிலான இடத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், கல்லூரியில் சேர்வதற்கான உத்தரவைப் பெற முடியாது. அசல் மாற்றுச் சான்றிதழை சமர்ப்பித்த பின்னர்தான் உத்தரவைப் பெறமுடியும்.சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் மாணவர்கள், கலந்தாய்வு அறைக்கு அனுப்பப்படுவர். இங்கு 50 கம்யூட்டர்கள் வைக்கப்பட்டிருக்கும். இங்கு மூன்று வாய்ப்புகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். மாணவர் தேர்வு செய்த வாய்ப்புகளில் பச்சை நிற விளக்கு எரிந்தால், இடம் காலியாக உள்ளது என்று அர்த்தம். மூன்றில் விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். தேர்வு செய்த வாய்ப்புகளில் சிவப்பு விளக்கு எரிந்தால், அதை முந்தைய நபர் தேர்வு செய்துவிட்டார் என்று புரிந்துகொள்ளவேண்டும். கலந்தாய்வு அறைக்குள் மாணவருடன் உதவிக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். எனவே, மாணவருடன் கல்லூரிகள் குறித்த விவரம் அறிந்த நபரை பெற்றோர் அனுப்ப வேண்டும்.இடத்தைத் தேர்வு செய்த பின்னர், முதல் மாடியில் உள்ள அறையில் கல்லூரியில் சேர்வதற்கான உத்தரவை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு கட்டாயம்: மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது உடல் தகுதிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும். எனவே மாணவர்களின் வசதிக்காக கலந்தாய்வு வளாகத்திலேயே உடல் தகுதிச் சான்று விநியோகிப்பதற்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்த அரங்கில் ரூ. 150 செலுத்தி, உடல் தகுதிச் சான்று படிவத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சுகாதார மையத்தில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி சான்று பெற்றுக் கொள்ளலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 உறுப்புக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கலந்தாய்வு வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் உடல் தகுதிச் சான்று பெற வேண்டியது கட்டாயம். இணைப்பு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் விருப்பப்பட்டால் இந்த அரங்கில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.கூடுதல் திரையுடன் கூடிய அரங்கு: கலந்தாய்வுக்கு உரிய நேரத்துக்கு முன்னரே வரும் மாணவ, மாணவிகள் அமர்வதற்காக, கலந்தாய்வு வளாகத்துக்கு எதிரில் இருக்கைகளுடன் கூடிய பெரிய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் 6 திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திரைகளில் தொடர்ச்சியாக அப்போதைய காலியிட நிலவரம் காண்பிக்கப்படும்.அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்திலும் அவ்வப்போதைய நிலவரத்தை மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக