விலைவாசி உயர்வை எதிர்த்து மாநில அளவிலான அனைத்துத் தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுகிறார்
சென்னை, ஜூலை 3: உணவு, கல்வி, ஊதியம், சமூகப் பாதுகாப்புகளைப் பெறுவதற்காக இரண்டாவது சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என்று ஏஐடியுசியின் அகில இந்திய பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா கூறினார். விலைவாசி உயர்வை எதிர்த்தும், வேலை இழப்புகளைத் தடுக்கக்கோரியும், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தியும் மாநில அளவிலான அனைத்து தொழிற் சங்கங்கள், சம்மேளனங்களின் கருத்தரங்கம் சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் குருதாஸ் தாஸ்குப்தா பேசியது: நாடு விடுதலையடைந்த பின்னர் இப்போதுதான் முதல் முறையாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்புக்கு வெளியே ஒரு சங்கம்கூட இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த ஒற்றுமை நீடித்து நிலைத்துவிட்டால் எந்த இடையூறுகளையும் எதிர்கொள்ளும் வலிமை தொழிலாளர்களுக்கு வந்துவிடும். மத்திய அரசாங்கம் தோலுரிந்து நிற்கிறது. ஒரு அமைச்சர் இன்னொரு அமைச்சரை வேவு பார்க்கிறார். நிதியமைச்சரின் அறையில் அவருக்குத் தெரியாமல் கேமரா, மைக், பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த அரசாங்கம் தனது அமைச்சரையே திகார் சிறைக்கு அனுப்பிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பிரதமரே செய்தியாளர்களை அழைத்து, "என்னுடைய அரசாங்கம்தான் இதுவரை இருந்தவற்றிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு என மக்கள் நினைக்கிறார்கள்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அப்படியானால் இந்த நாட்டில் நடக்கும் எதுவுமே அரசின் கையில் இல்லை என்றுதான் அர்த்தம். இதைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருக்க முடியுமா? நாட்டின் ஒவ்வொரு உற்பத்திப் பொருளும் தொழிலாளியின் கையில்தான் உருவாகிறது. ஒவ்வொரு தானியமணியும் நம் உழைப்பினால் உருவாகிறது. அலங்கோலமான நிர்வாகத்தால் நாம் உருவாக்கிய நாடு சிதைவதை அனுமதிக்க முடியாது. ஆ.ராசா மட்டுமல்ல, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும்கூட நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தவில்லை. இந்தியாவின் சுதந்திரம் பல லட்சம் மக்களின் தியாகத்தால் பெறப்பட்டது. இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். உணவு, மருத்துவம், கல்வி, குடிநீர், வீடு, ஊதியம், சமூகப் பாதுகாப்புகளைப் பெறவதற்கு சுதந்திரமே இல்லை. காசு இருந்தால் எல்லாம் கிடைக்கும். இல்லையெனில் எதுவுமே கிடைக்காது. எனவே, தொழிற்சங்க ஒன்றுமைதான் நாளைய பொழுது நல்லவிதமாய் விடிய வழிவகுக்கும். நமது எதிர்காலம், நமது சந்ததியின் எதிர்காலம் வெளிச்சமாக இருக்க வேண்டும். அதற்காக கரம் சேர்ப்போம் என்றார். சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், எச்எம்எஸ் தேசிய செயலர் தம்பான்தாமஸ், உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் ஆர்.குசேலர், ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் ஆர்.பி.கே.முருகேசன், பிஎம்எஸ் துணைத் தலைவர் எஸ்.துரைராஜ், ஏஐசிசிடியு என்.கே.நடராஜன், ஏஐயுடியுசி மாநிலக்குழு உறுப்பினர் நாராயணசாமி உள்பட பலர் கரத்தரங்கில் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக