அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில், 2009-10ம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட, 200 பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. கட்டுமானப் பொருட்களின் விலை, இரு ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, தற்போது, பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஒதுக்கப்பட்ட நிதியில் பள்ளிக்கட்டடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்காத நிலையில், தரமற்ற பள்ளிக்கட்டடம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், இடைநிலைக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், 2009-10ம் ஆண்டில், 200 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், நான்கு வகுப்பறை, ஒரு தலைமை ஆசிரியர் அறை, அலுவலக அறை, ஆய்வுக்கூடம், நூலகம், கலாசார அறை, கம்ப்யூட்டர் அறை உள்ளிட்டவற்றின் கட்டுமானத்துக்கு மட்டும், ஒவ்வொரு பள்ளிக்கும், 48 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2009, டிசம்பரிலேயே பள்ளி தலைமை ஆசிரியர், செயலராக உள்ள கல்விக் குழுவுக்கு முதல் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும், கட்டடம் கட்டுவதற்கான அப்ரூவ்டு மேப் தருவதில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட அலுவலர்கள் தாமதம் செய்ததால், பணம் வழங்கியும் கட்டட பணிகளை துவக்க முடியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் ஓராண்டு தாமதத்துக்கு பின், 2010 டிசம்பரில், மேப் உள்ளிட்ட அனுமதி வழங்கப்பட்டு, இப்பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் துவங்கின. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பெரும்பாலான பள்ளிகளிலும், தற்போது வரை பாதியளவு கட்டடம் கூட கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன் இருந்த கட்டுமானப் பொருட்களின் விலை, தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் விலை தற்போது, 16 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜல்லி ஒரு யூனிட், 1,500 லிருந்து, 2,500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சிமென்ட், இரும்பு கம்பி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதிப்பிடப்பட்ட அதே தொகையில், கட்டடங்களை கட்டி முடிக்க, தலைமை ஆசிரியர்கள் விரட்டப்படுகின்றனர். இதனால், தரமற்ற பள்ளிக்கட்டடங்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக இருந்தாலும், அதை பெற்றுக்கொள்ள தலைமை ஆசிரியர்கள் மறுக்கும் நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் இடைநிலைத் திட்டத்தில், 2009-10ம் ஆண்டில் மதிப்பிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்துள்ள வகுப்பறை கட்டடங்கள் தற்போதுதான் கட்டத்துவங்கியுள்ளனர். திட்ட மதிப்பீடு செய்யும் காலத்துக்கும், கட்டட பணி துவங்கும் காலத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதில், விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளதால், ஒதுக்கப்பட்ட நிதிக்கு, கட்டடங்களை கட்டி முடிக்க முடியாத நிலை உள்ளது. ஒரு சில தலைமை ஆசிரியர்கள், பிரச்னைகளை தவிர்க்க தங்களது சொந்தப்பணத்தை கொண்டு, கட்டடம் கட்டுகின்றனர். மனமில்லாதவர்கள், ஒதுக்கிய நிதியில் மேம்போக்காக கட்டடத்தை உருவாக்குகின்றனர். இதனால் பல பள்ளிகளில் கட்டடங்கள் தரமில்லாமல் உருவாகும் நிலை உள்ளது. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். பள்ளிக்கட்டடங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக