திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 27: சமச்சீர் கல்வித் திட்டத்தை நிகழ் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பூதலூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பூதலூர் வட்டாரக் கிளை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பூதலூர் ஒன்றியத் துணைத் தலைவர் ஜெ. ராகவன் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் தே. இன்பராஜ், செயலாளர் கோ. தேசிகன், பொருளாளர் ஜா. சார்லி தேவப்பிரியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், முழுமையான சமச்சீர் கல்வியை நிகழ் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். இடைநிலை, சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். ஒளிவுமறைவற்ற ஆசிரியர் கலந்தாய்வு முறையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். கூடுதல் பணிக்கால அடிப்படையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் சோலை தட்சிணாமூர்த்தி, மாவட்ட மகளிர் அணியின் தலைவர் லீதியாள் புவனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக