சென்னை, ஜூலை 3: உச்ச நீதிமன்றத்தின் 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்குமா என முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பை சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பதற்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு தொடங்கி விட்ட நிலையில், படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 1994 முதல் வழக்கு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். எனினும் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழகத்தில் 69 சதவீத ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதால், பாதிக்கப்படும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துமாறு 1994 முதல் ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் "வாய்ஸ்' தன்னார்வ அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஒவ்வொரு ஆண்டும் 1994 முதல் தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்து இடைக்கால உத்தரவை பெற்று வந்தார். கடந்த ஆண்டு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்து, 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் ஓராண்டுக்குள் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவில் எம்.பி.பி.எஸ்.-பி.இ. உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளில் முற்பட்ட வகுப்பினருக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவது குறித்த இடைக்கால ஆணை ஓர் ஆண்டுக்கு (2011-12) தொடரும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல்: தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 1,653. தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், 31 சதவீத இடங்கள், அதாவது 512 எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்துப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு கலந்தாய்வு மூலம் சனிக்கிழமை (ஜூலை 2) நிரப்பப்பட்டு விட்டது. எனினும் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்றினால் மொத்தம் உள்ள 1,653 இடங்களில் 826 இடங்கள் வரை உள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் அளிக்க வேண்டும். அதாவது, 17 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக இடங்களை ஏற்படுத்தி, ரேங்க் பட்டியலில் 512-வது இடம் முதல் 826-வது இடம் வரை இடையில் உள்ள 27 முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதி அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் விஜயன் கூறினார். இவ்வாறு கூடுதல் இடங்களை ஏற்படுத்தி முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் அளிப்பது குறித்து அரசிடம் அறிவுறுத்தல் கேட்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக