திருவாரூர், ஆக. 23: புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, செப்டம்பர் 6-ம் தேதி நாடு முழுவதும் அந்தந்த மாநில ஆளுநர் மாளிகைகளை நோக்கி அரசு ஊழியர்கள் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளனர் என்றார் அகில இந்திய மாநில அரசுகள் ஊழியர் சம்மேளனத்தின் தேசியப் பொதுச் செயலர் ஆர். முத்துசுந்தரம். திருவாரூரில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒவ்வொரு அரசு ஊழியரும், ஆசிரியரும் ஓய்வு பெறும்போது கிடைக்கும் மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்குவதுதான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். ஆனால், உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றின் கட்டளைக்கு இணங்க, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது. பணியில் உள்ளபோது, அந்த ஊழியரிடமிருந்து மாதந்தோறும் 10 சதவீதத் தொகையைப் பிடித்தம் செய்து, அதில் அரசின் பங்குத் தொகையையும் சேர்த்து அந்த நிதியை தனியார் நிதி நிறுவனத்திடம் வழங்கி, அந்த நிறுவனம் அந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு ஓய்வூதியம் வழங்குவது என்பதுதான் புதிய ஓய்வூதியத் திட்டம். ஆனால், உலக அளவில் தனியார் நிதி நிறுவனங்கள் காலப்போக்கில் நலிவடைந்தும், நிதியை கபளீகரம் செய்தும் மோசடியில் ஈடுபட்ட நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற்றுள்ளன. இதிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி, ஒரு கோடி கையெழுத்துகள் பெற்று பிரதமருக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுக்குப் பாராட்டு: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு வெளியிட்ட முதல் 7 அரசாணைகளில் அரசு ஊழியர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு, பணி வரன் முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு அனைத்து ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து உரிய தீர்வு காணப்படுமெனவும், அரசு ஊழியர்கள் மீது எவ்விதப் பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அதிகாரிகள் மட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளன்று புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படாது என தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அந்த நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்குமென நம்புகிறோம் என்றார் முத்துசுந்தரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக