கோவை : ஒருங்கிணைந்த கோவை கல்வி மாவட்டத்திலுள்ள மூன்று மாதிரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முழு உடல் இயக்க பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், 80 சதவீத மாணவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி, உடலியக்கம் மாறுபட்ட நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதிக எடையுள்ள புத்தக பையை அன்றாடம் சுமத்தல் உள்ளிட்ட காரணங்களால் இப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப் படுகிறது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு முழு உடல் இயக்க பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கல்வி மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை முகாம் சமீபத்தில் நடந்தது. "பிஸியோதெரபிஸ்ட்'கள் மூலம் மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் மூன்று பள்ளிகளில் நடந்த பரிசோதனையில் மொத்தம் 1,720 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், முழு உடல் தகுதியுடன் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை மிக, மிக குறைவு. கோவையில் 124பேரும், பொள்ளாச்சியில் 194 பேரும், திருப்பூரில் 31 பேர் மட்டுமே முழு உடல் தகுதியுடன் இருந்தனர். மீதமுள்ள 80 சதவீத மாணவர்கள் தசை இறுக்கம், தசை பிடிப்பு, தசைதிறன் குறைவு, கழுத்து, முதுகு, மூட்டு இவற்றில் மாறுபட்ட நிலை காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மாணவர்களை பரிசோதித்த "பிஸியோதெரபிஸ்ட்'கள் கூறியதாவது: முகாமில் குறைந்தபட்சம் 10ல் நான்கு மாணவர்களுக்காவது தசை இறுக்கம், தசை பிடிப்பு, தசை திறன் குறைவு, கழுத்து, முதுகு, மூட்டு இவற்றில் மாறுபட்ட நிலை, முதுகுத் தண்டுவட பாதிப்பு மற்றும் கூன் விழுதல் போன்ற பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. பலரால் நேராக நிமிர்ந்து நிற்கவோ, இரு பக்கமும் சரிவர திரும்பவோ முடிவதில்லை. அதிக எடையுள்ள புத்தக பையை முதுகில் ஒரே பக்கமாக சுமத்தல், நேராகவும், நிமிர்ந்தும் உட்காராதிருத்தல், வகுப்பறையில் போர்டிலுள்ள எழுத்துக்களை கூர்ந்து கவனிப்பதற்காக முன்னோக்கி அமருதல் உள்ளிட்ட காரணங்களால் மேற்கண்ட பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. இவ்வாறான பாதிப்புகளை உடைய மாணவர்களால் நீண்ட தூரம் இடைவிடாது நடப்பதே சிரமமாக இருக்கும்; நடந்தால் மூச்சு வாங்கும். சிறு வயதிலேயே இந்த அறிகுறிகளை கண்டுபிடித்து பயிற்சி மேற்கொண்டால் மாறுபட்ட நிலையை தவிர்க்கலாம். இல்லாவிடில் பெரியவர்களான பின் சிரமப்படுவர். மருத்துவ பரிசோதனையின்போது மாணவர்களின் பெற்றோரும் உடனிருந்தால், பயிற்சி தொடர்பான விளக்கங்களை அவர்களுக்கு தெரிவிக்க முடியும். அவ்வாறின்றி, தற்போது ஆசிரியர்கள் மட்டுமே உடனிருப்பதால் பெரிய அளவில் பயன்கிடைக்குமா என்பது சந்தேகம். இவ்வாறு, பிஸியோதெரபிஸ்ட்கள் தெரிவித்தனர். எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் கூறுகையில், "சென்னை பள்ளிகளில் நடந்த மருத்துவ பரிசோதனை முகாம்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் "மாறுபட்ட நிலையில்' இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவேதான், மாணவர்களின் நலன்கருதி அனைத்து மாவட்டங்களிலும் முழு உடல் இயக்க பரிசோதனை முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க முயற்சிக்கப்படும். இந்த பரிசோதனை திட்டம் தமிழகத்தில்தான் முதன்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக